பிக் பாஸ் வீட்ல என்னைவிடக் கெட்டவார்த்தை பேசினவங்க அதிகம்-அதை ஏன் காட்டலை ?

0
2126
- Advertisement -

“ ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி சினிமாவோ… சீரியலோ இல்லை, நடிக்கிறதுக்கு. அப்படி நினைச்சுதான் நான் என் இயல்போடு எதார்த்தமா இருக்கப்போய், அதனாலேயே பல பிரச்னைகளைச் சந்திச்சுட்டேன். ஆனா, அதுக்காகவெல்லாம் ஃபீல் பண்ணாம, என் வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்” – புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம். மிகவும் வெளிப்படையாக, உற்சாகமாக நம் கேள்விகள் அனைத்துக்கும் பதிலளித்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

” ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் போறதுக்கு முன்னாடியே அந்த நிகழ்ச்சிக்காக உங்களைத் தயார்செய்துகிட்டீங்களா?”

“இல்லையே. அதுதான் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு. என்னோட இயல்பான அணுகுமுறையோடுதான் அந்த வீட்டுக்குள்ளும் இருந்தேன். ஆனா, சில போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே தங்களைத் தயார்படுத்திட்டு, இயல்புக்கு மாறான முகத்துடன் வந்திருந்தாங்க.”

-விளம்பரம்-

”நட்சத்திர அந்தஸ்து இருக்கிற நீங்களும், உங்ககூட சிலரும் சேர்ந்து, ஜூலி உள்ளிட்ட ஸ்டார் வேல்யூ இல்லாதவங்க மேல ஆதிக்கம் செலுத்தினீங்களா?”

ஜூலி ஆரம்பத்தில் அதிகமா கஷ்டப்பட்டது உண்மைதான். ஸ்டார்ஸுக்கு மத்தியில் தான் தெரியாமல்போயிடக் கூடாதுனு அவ தன்னை சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன் ஆக்கிக்க நிறைய விஷயங்களைச் செய்தாள். மேலும், தன்னைப் பற்றி நர்ஸ், வீஜேனு நிறைய மாறுபட்ட தகவல்களைச் சொன்னாள். அதைத் தெளிவுபடுத்திக்க நாங்க தொடர்ந்து அவகிட்ட கேள்விகள் கேட்கப்போய் அது பிரச்னை ஆயிடுச்சு. ஆனா, சில நாள்கள்லயே நாங்க எல்லோரும் சரியாகிட்டோம். அவகிட்ட எந்தப் பாகுபாடும் பார்க்கலை, ஆதிக்கமும் செலுத்தலை.”

” ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள உருவான பல பிரச்னைகளுக்கு நீங்க காரணமா இருந்தீங்களா?”

“ஜூலிக்கும் ஆர்த்திக்கும் பிரச்னை வந்த சமயம் முதல்ல நான்தான் ஜூலியைச் சமாதானப்படுத்தினேன். அதனாலதான் அவங்க சண்டை கட்டுக்குள் வந்துச்சு. ஒருகட்டத்துல அந்தச் சண்டை உள்ளிட்ட பல சண்டைகள் என்னாலதான் வந்த மாதிரி எடிட்டிங்ல காட்டியிருக்காங்க. எல்லாப் பிரச்னைகளும் ஆரம்பத்துல இருந்து முடிவுவரை ஆடியன்ஸூக்கு முழுமையா காட்டப்படாம நடந்த எடிட்டிங் வேலைகள்தான், நீங்க கேட்ட கேள்விக்குக் காரணம்னு நினைக்கிறேன்.”

“ஜூலிகிட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பத்தி பேசினப்போ, நீங்க சார்ந்த பா.ஜ.க-வுக்கு விசுவாசமாகப் பேசினீங்களே?”

“இல்லைங்க… அதில் கட்சி சார்பெல்லாம் இல்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பற்றி ஜூலிகிட்ட பேசினப்போ, ‘நீ போராடினது தப்பில்லை. ஆனா, அந்த இடத்துல போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தை மீறி கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்றதுதான் தப்பு’ங்கிற மாதிரி நானும் ஆர்த்தியும் சொன்னோம். எதார்த்தமா பேசப்போய், அது பெரிய விவாதத்தை ஏற்படுத்திடுச்சு. அதுக்காக எனக்குக் கட்சி சாயமெல்லாம் பூசிட்டாங்க. அந்த நிகழ்ச்சியில் இருந்தவரைக்கும் நான் கட்சி சார்புள்ளவளா நடந்துக்கவேயில்லை.”

“பரணி வெளியேறினது நிர்பந்தத்தினாலதான். அதில் உங்களுக்குப் பங்கில்லையா?”

“நிச்சயமா இல்லை. மத்தவங்க சொல்றதுக்காகச் சொல்லலை. சில விஷயங்கள் தவறானதாகவே எனக்குத் தெரிஞ்சுது. ஒருகட்டத்துல, ‘பரணி விஷயமா கமல் சார்கிட்ட பேசணும், அதை டிவியில ஒளிபரப்ப வேண்டாம்’னுதான் நாங்க எல்லோருமே கேட்டிருந்தோம். ஆனா, அதுக்கு முன்னாடி அவராவே சுவர் ஏறிக் குதிக்க ட்ரை பண்ணினார். வெளியேறினார். இதுக்கு மேல பரணி விஷயத்தைப் பத்தி பேச விரும்பலை.”

“நிகழ்ச்சியில பெரும்பாலும் காயத்ரியைக் கோபமாகத்தான் பார்க்க முடிஞ்சுது. ஏன் உங்களுக்கு அதிகமா கோபம் வருது?”

(பலமாகச் சிரிக்கிறார்) “சத்தியமா நான் ரொம்பக் கோபக்காரி இல்லைங்க. இதை என்னோடு வொர்க் பண்ணின ஆர்டிஸ்ட் யார்கிட்ட வேணாலும் கேட்டுப்பாருங்க. அடிப்படையில நான் ஒரு டான்ஸ் மாஸ்டர். ஆண்கள் சூழ்ந்த சினிமா உலகத்துல ஒரே நேரத்துல 50-க்கும் அதிகமானோர்கிட்ட வேலை வாங்கணும். அதுக்காக எப்பவுமே நான் போல்டா இருக்கிற மாதிரி காட்டிப்பேன். அப்படி இருக்கிறது பெண்ணுக்குப் பலம்னு நினைக்கிறேன். ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள நிறைய பிரச்னைகள் வந்துகிட்டு இருந்ததால, என்னை அறியாம சில தருணங்கள்ல என் கோபமான முகம் வெளிப்பட்டுச்சு. அந்த முகம் வெளிப்படக் காரணமான சூழலை, நிஜ களத்துல இருந்து பார்த்தால்தான் என் தரப்பு நியாயம் புரியும். ஆனா, இப்போ வரைக்கும் அது வெளிய தெரியாததாலதான் காயத்ரி எல்லோருக்கும் வில்லியாகிட்டாள்.”

” ‘சீர்’ வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத நீங்கள், ஆபாச வார்த்தைகளை அடிக்கடி பேசினீங்க. அதைச் சுட்டிக்காட்டிய பின்னரும் தவறை உணராமலேயே இருந்ததுபோல தெரிஞ்சுதே?”

“ஃபாரீன்ல காலேஜ் படிப்புப் படிச்சதால தமிழ் மொழியோட டச் விட்டுப்போச்சு. தொடர்ந்து பேப்பரை எழுத்துக்கூட்டிப் படிச்சுதான் மறுபடியும் தமிழ் மொழியைப் பேசக் கத்துக்கிறேன். ‘சீரா இருக்கு’னு சொன்னதை, ‘சீரழிஞ்சுபோயிடுச்சு’ அப்படீன்னு அர்த்தம் புரிஞ்சிக்கிட்டேன். தவிர, என்னைவிட அந்த வீட்டுல நிறைய பேர் ரொம்ப அசிங்கமா கெட்டவார்த்தை பேசினாங்க. ஆனா, அது டெலிகாஸ்ட் ஆகலை. அதுக்காக நான் பேசினதை நியாயப்படுத்தவும் இல்லை.

கோபத்தில் என்னையும் அறியாம வெளிப்பட்ட வார்த்தை பலரையும் காயப்படுத்தினதுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இப்போ நான் கெட்ட வார்த்தை பேசுறதை ரொம்பவே குறைச்சுக்கிட்டேன். ஆனா, கண்டிக்கிறதா சொல்லி,என்னைத் திட்டி சமூக வலைதளத்துல ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தினவங்க பலர். நான் செஞ்சது தப்புன்னு சொல்றதைச் சுட்டிக்காட்ட, என்னைவிட மிக மிக மோசமா ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தினது சரியா?”

“நீங்க செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்டின கமல்ஹாசன் மற்றும் சக போட்டியாளர்கள் மேல் குற்றம் சொன்னீர்களே…?'”

“அப்பா ரகுராம், என்னைக் கஷ்டமே தெரியாம வளர்த்தார். எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்கும் அவர், செல்லம் கொடுக்கும் அதே சூழல்ல அன்போடுதான் என் தவற்றையும் சுட்டிக்காட்டி சரிசெய்வார். ஆனா, ஒருபோதும் இன்னொருத்தர் முன்னாடி என்னைக் கண்டிக்கமாட்டார். என் தப்பை யார் வேணாலும் கண்டிக்கலாம். என் நலனில் அக்கறை காட்டுற எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, பலர் முன்னாடி என்னைக் கண்டிக்கிறது எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. அதனாலதான், ‘என்னை ஊர் திருத்துறதைவிட, என் அம்மா கோபப்பட்டு ரியாக்‌ஷன் காட்டுறதுதான் எனக்கு அதிகமா வலிக்கும்’னு சொன்னேன். அப்படித்தான் கமல் சார் என்னைக் கண்டிச்சப்போகூட அவர் மேல எனக்கு சின்ன கோபம் வந்துச்சு. அதுவும் உடனே போயிடுச்சே.

நான் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகணும். ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள என்ன நடந்துச்சுனு போட்டியாளர்களான எங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆடியன்ஸ் பார்த்தது, உள்ள நடந்ததில் வெறும் 10% மட்டும்தான். அதுல மக்களிடம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துற மாதிரியான சண்டை, சச்சரவு பிரச்னைகளைதான் அதிகமா ஒளிபரப்பினாங்க. ஆனா, 90% அங்க அன்பு, நட்புனு எக்கச்சக்க பாசிட்டிவ் விஷயங்களும் நடந்துச்சு.

நானும் சக போட்டியாளர்களுக்கு பணிவிடைகள் செய்றதுல தொடங்கி, அன்பு காட்டுற வரைக்கும் அவங்கமேல பாசத்தைக் காட்டியிருக்கேன். அதெல்லாம் முழுசா ஆடியன்ஸ் பார்வைக்குப் போகாததுதான் எனக்கு இப்போவரைக்கும் வருத்தமா இருக்கு. நான் ஒரு விஷயம் எல்லோர்கிட்டயும் கேட்கிறேங்க… உள்ளே எங்களோட நடவடிக்கையை ஊரே பாக்குதுனு தெரிஞ்ச பிறகும், எங்க பெயர் கெட்டுப்போகுற மாதிரி நாங்க எப்படிங்க எல்லா நேரத்துலயும் நடந்துப்போம்? ஒரு லாஜிக் வேண்டாமா?”

“அப்போ… ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள நடந்ததெல்லாம் ஸ்க்ரிப்ட் எனச் சொல்லப்படுவது உண்மையா?”

“எனக்கு முழுசா தெரியலை. ஆனா, எனக்கு எந்த ஸ்க்ரிப்டும் கொடுக்கப்படலை. சில போட்டியாளர்களுக்குச் சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுச்சுனு சிலர் மறைமுகமா எங்கிட்ட சொன்னாங்க. அது எந்த அளவுக்கு உண்மைனு தெரியலை. ஆனா, நிகழ்ச்சி தொடங்கும் முன்னாடியே எங்க ஒவ்வொருத்தருடைய குணத்தையும் தெரிஞ்சுக்கிட்டாங்க. அதோடு முதல் வாரம் அனுயா வெளியேறினப்போ, விளையாட்டா என்னை ‘வில்லி’னு மென்ஷன் பண்ணிட்டுப் போனாங்க. தொடர்ந்து அந்த பிம்பத்துலேயே என்னைக் காட்ட முயற்சி பண்ணி, அதையும் நிறைவேற்றிட்டாங்க. அதனால ஏகப்பட்ட பிரச்னை உருவாகிடுச்சு. நானும் நிறைய சிக்கலைகளைச் சந்திச்சுட்டேன்.”

“ஓவியாவுக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை?”

“ஒரு பிரச்னையும் இல்லை. ஆரம்பத்துல நாங்க ரொம்பவே நட்போடுதான் இருந்தோம். ஒருகட்டத்துல அந்த வீட்டுல ஒருத்தர் பண்ற விஷயம், இன்னொருத்தருக்குப் பிடிக்காம இருந்துச்சு. அப்படி, ஓவியா நடந்துகிட்ட விதம் சிலர் மனசைக் கஷ்டப்படுத்திச்சு. அதை நேரடியாகக் கண்டிச்சேன். ஆனா, ஒருகட்டத்துல அவங்க சிங்கிள் சைல்டா வளர்ந்தது தெரியவந்தப்பிறகு என்னோட கோபம், தொடர்ந்து ஓர் அக்கா பாண்டிங்லதான் இருந்துச்சு. ‘அம்மா தாயே… உன்னால என் பெயர் கெட்டுப்போக…’னு நான் கோபத்துல பேசினாலும் கொஞ்ச நேரத்துலயே நாங்க சந்தோஷமா பேச ஆரம்பிச்சுடுவோம். சண்டை போடுறதைவிட பல மடங்கு அன்பாப் பேசிப்போம். அப்படியான தருணங்கள்ல ஆடியன்ஸ் பார்த்த ஒரே காட்சி, ‘உடனே நான் வீட்டுக்குப் போகணும்’னு ஓவியா மன அழுத்தமாகியிருந்த அந்த க்ரிட்டிகல் சூழல்ல நான் அவங்க மேல காட்டின அன்பு. தனிப்பட்ட முறையில அவங்க மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை.”

“ஓவியா – ஆரவ் காதல் விவகாரத்தில் அதுக்கு முதல் தூண்டுகோளாக இருந்தது, கடைசியில் நழுவிக்கொண்டது சக போட்டியாளர்கள்தானே?”

“ஆரம்பத்துல ஃபன்னா காதல் விஷயத்தைப் பத்தி ஓவியாவும் ஆரவும் பேசிட்டிருந்தாங்க. அதை சக போட்டியாளர்களும் விளையாட்டா நினைச்சுதான் கலாய்ச்சிட்டிருந்தோம். ஒருகட்டத்துல எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரி சில போட்டியாளர்கள் அவங்களை சேர்த்துவெச்சுப் பேசினாங்க. அதுவேகூட ஓவியாவுக்கு ஆரவ் மேல காதல் வர ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனா, இப்போ அந்தப் பிரச்னை ஸ்மூத்தா முடிஞ்சுடுச்சு. அதனால இத்தோடு இந்தப் பிரச்னையை விட்டுடலாம்.”

“சினேகனைப் பற்றி உங்க கருத்து என்ன?”

“உள்ளே போனதுல இருந்து வெளியே வந்த வரைக்கும் நாங்க ஃப்ரெண்ட்ஸாதான் இருக்கிறோம். ஆனா, எல்லோரையும்விட அவர் கேமை ரொம்பவே சீரியஸா எடுத்துகிட்டு நல்லாவே ப்ளே பண்ணிட்டார். பரணி, ஓவியா வீட்டுக்குள்ள இருந்தப்போ, வெளிய போனப்போ அவர் எப்படி நடந்துகிட்டார்னு ஆடியன்ஸூக்குத் தெரியும். அவர் சிறப்பா விளையாடிட்டார். நான் சொல்லும் அர்த்தம் புரியுறவங்களுக்கு நல்லாப் புரியும்.”

Image result for snehan

“நிகழ்ச்சியில இருந்து வெளிய வந்த பிறகு உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?”

“எக்கச்சக்க பிரச்னைகள் இருந்தும், கடைசி வரை நான் உண்மையா விளையாடினதுல பெருமைதான் எனக்கு. 56 நாள்கள் கழிச்சு வெளிய வந்த பிறகு, செலக்டிவா நிகழ்ச்சியின் ஃபுட்டேஜைப் பார்த்தேன். அதுல நான் தப்பு பண்ணினதைவிட, தப்பா சித்திரிக்கப்பட்டதுதான் அதிகமா இருந்துச்சு. இடைப்பட்டக் காலத்துல நடந்த நிகழ்வுகளை அம்மாவும் சொன்னாங்க. தொடர்ந்து என்னோட தவறுகளை தெரிஞ்சுகிட்டு, அதை சரிபடுத்திக்க முயற்சி பண்ணினேன். அடுத்து உத்வேகப்படுத்திகிட்டு, என்னோட பிரதான வேலைகள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்.”

” ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உங்களுக்குள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு?”

“நிகழ்ச்சியில இருந்து வெளிய வந்த பிறகு மக்கள் என்ன விரும்புறாங்க என்பதை தெளிவா புரிஞ்சுக்கிட்டேன். மக்களுக்கு காட்டப்பட்டதை வெச்சு மதிப்பிடுறாங்க. அது தவறில்லை. மீடியா ஒருத்தரை எப்படி பாசிட்டிவாவும், நெகட்டிவாகவும் காட்ட முடியும், அதன் தாக்கம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் ரொம்பவே தெளிவா தெரிஞ்சுகிட்டேன். நிறையப் பாடங்களைக் கத்துக்கிட்டேன். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, என்னைப் புது காயத்ரியாக மாத்தியிருக்குது. போட்டியாளர்களான நாங்ககூட எங்களுக்குள் ஏற்பட்ட சின்னச் சின்னப் பிரச்னைகளை உடனே மறந்துட்டோம். அடிக்கடி சந்திச்சு எங்க நட்பை வலுப்படுத்திக்கிறோம். ஆனா, அந்த கேம் ஷோவை ரொம்ப சீரியஸா எடுத்து இப்போ வரைக்கும் மக்கள் அதுக்கு ரியாக்ட் பண்ணிட்டிருக்காங்க. இதனால என்ன பயன் தெரியலை.”

“சரியான நபருக்கு டைட்டில் கிடைச்சிருக்குனு நினைக்கிறீங்களா?”

“நிச்சயமாக. ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் போராடி, எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துகிட்ட ஆரவ் டைட்டில் வின்னர் ஆனது சரினு நினைக்கிறேன்.”

“இப்போ சினிமா வொர்க்ல கவனம் செலுத்துறீங்களா?”

“தென்னிந்திய மொழிப் படங்கள்ல நடிக்கிறது மற்றும் கோரியோகிராபி வேலைகள்லயும் இப்போ கவனம் செலுத்திட்டிருக்கேன். சினிமா பயணம் இப்போ கியர் அப் ஆகியிருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட கட்சிப் பணிகள்லயும் தீவிரமா கவனம் செலுத்த இருக்கேன்” என்பவரிடம், ”அடுத்து ரேபிட் ஃபையர் கேள்விகள்” எனச் சொன்னதும் சிரிக்கிறார். ”நிச்சயமா பதில் சொல்றேன். ஆனா, ‘காயத்ரியின் ஃபன் பதில்கள்’னு மென்ஷன் பண்ணிடுங்க” என வேண்டுகோள் வைத்து பதிலளிக்கிறார்.

ரேபிட் ஃபையர் கேள்விகள்:

‘பிக் பாஸ்’ போட்டியாளர்களில் உங்களுக்கு ரொம்பப் பிடித்தவர்?

சக்தி!

பிடிக்காதவர்?

யாரும் இல்லை!

மிகவும் ஃபேக்காக நடந்துகொண்டவர்?

சினேகன்!

மிக இயல்பாக நடந்துகொண்டவர்?

கஞ்சா கருப்பு!

எல்லா டாஸ்கையும் பெஸ்டாகச் செய்தவர்?

சினேகன், ஆரவ்!

இந்த நிகழ்ச்சி மூலமாக யாருடைய இமேஜ் அதிகம் பாதிப்புக்குள்ளானது?

ஜூலி. அடுத்ததாக நான்!

மிகவும் புகழ் பெற்றவர்?

ஓவியா!

கமல்ஹாசனின் செயல்பாடுகள் சரியாக இருந்தனவா?

மிகச்சரியாக இருந்துச்சு!

அடுத்த சீசன் ‘பிக் பாஸ்’க்கு அழைத்தால் செல்வீர்களா?

நிச்சயமா போகவே மாட்டேன்!

Advertisement