‘அமரன்’ படத்தை பார்த்து ரசித்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள்- வேலூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

0
159
- Advertisement -

‘அமரன்’ படத்தை இலவசமாக ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒளிபரப்பிய செய்திதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.

- Advertisement -

அமரன் படம்:

மேலும், இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார் . தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் அமரன் படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாராட்டுகளைப் பெற்று வருகிறது:

இந்தப் படத்தைப் பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், வேலூர் அடுத்துள்ள ராணுவப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு அமரன் திரைப்படம் இலவசமாக பழவஞ்சாத்து குப்பத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் திரையரங்கில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்:

இதற்கான ஏற்பாடுகளை கம்மவான் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை ஆகியோருடன் இணைந்து கம்மவான் பேட்டை ராணுவ நலச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நேற்று, நவம்பர் 10ஆம் தேதி காலை காட்சி பார்ப்பதற்காக ராணுவப் பேட்டை கிராமத்தில் வசிக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து அமரன் படத்தை கண்டு ரசித்தனர். படம் பார்ப்பதற்கு முன்னதாக, ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.

ராணுவ குடும்பத்தினர் பகிர்ந்தது:

அப்போது அமரன் படத்தை பார்த்து நெகிழ்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், இந்த படம் ராணுவ குடும்பங்களுக்கு நல்ல ஒரு பங்களிப்பாக இருக்கிறது. ஆண்கள் ராணுவத்தில் பணி புரிவதால், பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் வருகிறது. அந்தப் பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. அமரன் படம் எல்லாரும் பெருமைப்படக்கூடிய ஒரு விஷயம். ரொம்ப அழகாக எடுத்து இருக்கிறார்கள். இந்தப் படம் பார்த்ததில் எங்களுக்கு ரொம்ப திருப்தியாக இருக்கிறது. எங்களுக்காக இந்த படம் பார்க்க ஏற்பாடு செய்தவர்களுக்கு ரொம்ப நன்றி என்று கூறி பேசியிருந்தார். இதுபோல் பல இடங்களில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement