இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி, சினிமாவிற்கு வரும் முன் தான் பட்ட கஷ்டங்களை பற்றி பேசியிருக்கும் விஷயங்கள் தான் தற்போது வைரல் ஆகியுள்ளது. சமீபத்தில் ‘பார்க்’ திரைப்படத்தில் இசை மட்டும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ.நடராஜ் தயாரிப்பில் இ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. விழாவில் சிறப்பு விருந்தார்களாக திரைப்பட இயக்குனர்கள், ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம் புலி, சரவண சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் சிங்கம் புலி பேசும்போது,’ நான் போட்டோ ஸ்டூடியோவில் ஃபிலிம்களை டெவலப் செய்யும் டார்க் ரூமில் ஆறு மாதம் தங்கியிருந்தேன். அங்கு ஒன்றுமே பார்க்க முடியாது. லைட் கூட போட மாட்டார்கள் சின்ன சிவப்பு விளக்கு மட்டும்தான் எரிந்து கொண்டிருக்கும். எந்த பொருள் எங்கே இருக்கிறது என்று கூட நமக்கு தெரியாது. இப்படி எல்லாம் சிரமப்பட்டு தான் எல்லாரும் சினிமாவிற்கு வந்தோம் என்று கூறினார்.
சிங்கம் புலி பேசியது :
அதைத் தொடர்ந்து, இப்படி சிரமப்படுவது பிற்காலத்தில் நன்றாக இருப்பதற்காக மட்டும்தான். அதேபோல் கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர். அதையெல்லாம் விட்டுவிட்டு சினிமாவின் மீது இருக்கும் விருப்பத்தால் நடிக்க வந்திருக்கிறார். சினிமா அவரை கைவிடாது. ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும்.
சினிமா வாய்ப்பு கொடுக்கும் :
சினிமா தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும், தலையில் முடியே இல்லாத தலைசீவ வழி இல்லாமல் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும். மேலும், எனக்கு பாட்டு பாடவும் பிடிக்கும், ஆனால் டப்பிங் நடக்கும் போது நான் இடைவெளியில் பாடினால் விடவே மாட்டார்கள் என்று விழாவில் கலகலப்பாக பேசினார். கடைசியாக சிங்கம்புலி அவர்கள் ‘மகாராஜா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சிங்கம் புலி குறிப்பு:
‘பாயாசம் எங்கடா. ..’ இந்த டயலாக்கை யாராலும் மறக்க முடியாது. இந்த ஒரு வசனத்தின் மூலம் நம்மில் பலருக்கும் அறிமுகமானவர் சிங்கம் புலி. நமக்கு காமெடி நடிகராக அறிமுகம் ஆன இவர் உண்மையில் இன்ஜினியரிங் படித்த ஒரு இயக்குனர் ஆவார். இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு இயக்குனர் ஆசையில் சென்னைக்கு வந்த சிங்கம்புலி, சுந்தர்.சி இடம் துணை இயக்குனராக வேலை செய்துள்ளார். அஜித்தின் ‘உன்னை தேடி’ படத்திற்கான கதையை எழுதியது இவர் தானாம்.
சிங்கம் புலி இயக்கிய படங்கள்:
அதற்குப் பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த சிங்கம் புலி, 2002ல் வெளிவந்த அஜித்தின் ‘ரெட்’ , 2005 ல் வெளிவந்த சூர்யாவின் ‘மாயாவி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது காமெடியனாகவும், குணச்சித்திர நடிகர் ஆகவும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இதனை தொடர்ந்து சிங்கம்புலி சில படங்களை இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.