என் கணவரிடம் பேச நானும், குழந்தைகளும் தவிக்கிறோம்- ஜெயம் ரவி விவாகரத்து பற்றி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை

By subhashini · 11/9/2024

விவாகரத்து தொடர்பாக ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்தி தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரபல நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக சமீபத்தில் இணையதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. ரவி, ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மேலும், ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

அதோடு தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி-ஆர்த்தி திகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் சமீபத்தில் இவர்கள் விவாகரத்து பெறுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் இது தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரை இல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு, திரைத்துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகத் துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.

விவாகரத்து அறிவிப்பு:

எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைகளுக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல் வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கும் மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்த்தி அறிக்கை:

இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி என்று கூறி இருந்தார். இதை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் பேரதிர்ச்சி. இந்நிலையில் விவாகரத்து தொடர்பாக நடிகை ஆர்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன்.

ஜெயம் ரவி-ஆர்த்தி சர்ச்சை:

என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.

View this post on Instagram

A post shared by Aarti Ravi (@aarti.ravi)

விவாகரத்து குறித்து சொன்னது:

மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full