அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
ஆட்டி படம் விமர்சனம்
இயக்குனர் கிட்டு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஆட்டி. இந்த படத்தில் இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, காதல் சுகுமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கிறார். இன்று வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் 70களில் கதை துவங்குகிறது. மதுரை மாவட்டத்தில் கோடை மலை கிராமம் இருக்கிறது. இங்கு பல பழங்குடி மக்கள் தங்களுடைய கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் வருகிறார். இவர் அநீதிகளை பொறுத்துக் கொள்ளவே மாட்டார். தவறு செய்பவர்களை என்கவுண்டர் செய்து விடுவார். அந்த அளவிற்கு நேர்மையான அதிகாரியாக இருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் தான் இந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மதுரையிலிருந்து வேலைக்காக வருகிறார். அவர் பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதை இன்ஸ்பெக்டர் இசக்கி விசாரிக்கிறார். பல கோணங்களில் விசாரித்துமே எந்த ஒரு துப்புமே கிடைக்கவில்லை. மதுரைக்குச் சென்று ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் போது தான் நடந்த கொலைக்கும் 150 வருடத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களுக்கும் தொடர்பு தெரிகிறது.
இதை இசக்கி கண்டுபிடித்து விடுகிறார். அதற்குப் பிறகு என்ன நடந்தது? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. கொடைக்கானல் மலை கிராமங்கள், இயற்கையோடு சேர்ந்து வாழும் மக்கள், பள்ளி, போலீஸ் ஸ்டேஷன், தபால் நிலையம் என்று ஒரு அழகான கிராமத்தையே கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
படத்தின் ஆரம்பத்திலிருந்து வித்தியாசமான கதாபாத்திரங்கள், அமானுஷ்ய காட்சிகள் என்று கதை நகர்கிறது.
கொலைக்கு பிறகு கதை ரொம்பவே பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது. அதோடு கொலையை யார் செய்தார்? என்று இன்ஸ்பெக்டர் தேடி செல்லும் காட்சிகள் எல்லாம் சுவாரசியமாக இருக்கிறது. மேலும் படத்தில் ரசிக்கும் படியாக சில விஷயங்கள் இருக்கிறது. கிராம மக்களுடைய வாழ்க்கையின் அழகை ஒளிப்பதிவின் மூலம் சிறப்பாக காண்பித்து இருக்கிறார்கள். பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.
இசக்கி கார்வண்ணன் ஒரு போலீஸ் அதிகாரியாக தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய நடிப்பை பார்க்கும்போது உண்மையான அதிகாரியை பார்ப்பது போலவே இருக்கிறது. இவரை அடுத்து அபி நட்சத்திரா பழங்குடி மக்களாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். காதல் சுகுமார் உடைய காமெடிகள் எல்லாம் சிரிக்க வைக்கிறது. படத்தினுடைய எடிட்டிங் நன்றாக இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்களின் பாதுகாப்பிற்காக என்ன செய்தார்கள் என்று நாம் யோசிக்க முடியாத ஒரு படத்தில் இயக்குனர் சொல்லிருப்பது மிகப்பெரிய விஷயம். மொத்தத்தில் எல்லோரும் கண்டு ரசிக்கும் படியான படமாக தான் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் நடிப்பு
கதைக்களம் நன்றாக இருக்கிறது
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்
இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது
படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இயக்குனர் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கின்றார்
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
குறை:
ஆரம்பத்தில் படம் மெதுவாக செல்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் ஆட்டி - சிறப்பான படம்