விருது வாங்கினாலும் நான் மிடில் கிளாஸ்தான், பட்டங்களே எனக்கு வேண்டாம் - அஜித் குமார் எஸ்க்குளுசிவ்

By subhashini · 29/4/2025

பத்ம பூஷன் விருது வாங்கிய பிறகு நடிகர் அஜித் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் மத்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் அஜித்துக்கும் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

நேற்று மாலை டெல்லியில் தான் பத்ம விருது விழா நடைபெற்றது. இந்த விருதை வாங்க அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருந்தார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் கையால் அஜித் விருதை வாங்கி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பத்மபூஷன் விருது வாங்கியதை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபல ஊடகத்திற்கு அஜித்குமார் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் பத்மபூஷன் அஜித்குமார் என்று அழைப்பது எப்படி இருக்கிறது? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அஜித், இன்னும் நான் மனதளவில் மிடில் கிளாஸ் ஆகத்தான் உணர்கிறேன்.

அஜித் பேட்டி:

பத்மபூஷன் என்று சொன்னால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இந்த பத்மபூஷன் விருதை வழங்கிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு நன்றி. பிரதமர் மோடி அவர்களுக்கும் நன்றி. இந்திய அரசாங்கத்திற்கும் நன்றி. திரைப்படத்துறை, மோட்டார் ரேஸிங் துறை, சென்னை ரைபிள் கிளப் என அனைவருக்கும் நன்றி. முக்கியமாக என்னுடைய குடும்பம். எனக்கு எப்போதுமே துணையாக இருக்கும் என்னுடைய மனைவி, என் குழந்தைகளுக்கும் நன்றி. என்னுடைய வெற்றி தோல்வி என எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பது அவர்கள் தான்.

https://www.youtube.com/watch?v=uNafZi3QHjE

நன்றி சொன்ன அஜித்:

எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த விருது நான் சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை சொல்வதற்காக ஊக்கமளிக்கிறது. மேலும், நான் சினிமாவில் நடிக்கிறேன். அதற்கு நல்ல சம்பளம் வாங்கினேன். அவ்வளவுதான். அதை தாண்டி தல, சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்கள் எல்லாம் எனக்கு தேவையில்லை. சினிமா தவிர தனிப்பட்ட வாழ்க்கை, எனக்கு பிடித்த வேறு பல வேலைகள், கனவுகள் இருக்கின்றது.

அஜித் வைத்த கோரிக்கை:

அதனால் அஜித்குமார், ஏகே, அஜித் என்று என் பெயரை சொல்லி கூப்பிட்டாலே எனக்கு போதும். எனக்கு பிடித்த வேலைகளை விரும்பி செய்கிறேன். என்னை எவ்வளவு சாதாரணமாக வைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்கிறேன். மக்கள் என் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். நான் எந்த துறையில் என்ன செய்தாலும் ஆதரவையும் அன்பையும் அள்ளித் தருகிறார்கள். அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அஜித் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் 90s காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் செய்து வருகிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இதை அடுத்து அஜித் அவர்கள் தன் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full