இசையமைப்பாளர் கனவு முதல் காமெடி நடிகர் - ‘அல்வா’ வாசுவின் யாரும் அறியாத மறுபக்கம்

By subhashini · 19/1/2025

காமெடி நடிகர் அல்வா வாசுவின் மறுபக்கம் குறித்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் அல்வா வாசு. இவருடைய சொந்த ஊர் மதுரை. இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடக்கூடிய சூழ்நிலையில் இருந்தவர். இருந்தாலும் வாசு தன்னுடைய படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார். இவருக்கு சிறுவயதில் இருந்து இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

இசை மீது இருந்த ஆசையினால் இவர் கிடார் வாசிக்க பயின்றார். ஒரு கட்டத்தில் கிடாரில் அவருடைய கைகள் விளையாடி இருந்தது. இவர் பெஞ்சில் தாளம் போட்டால் அவருடைய நண்பர்கள் எல்லாம் ஆட்டம் ஆடுவார்கள். அந்த அளவிற்கு வாசு இசையை நேசித்தார். அதோடு இவர் எம் காம் படித்து இருக்கிறார். கல்லூரியில் மியூசிக் என்றால் வாசு தான் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு இசை மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பின் அவருடைய நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால் வாசு சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்தார்.

நடிகர் வாசு குறித்த தகவல்:

ஆரம்பத்தில் சினிமா ஆசை உடன் சென்னைக்கு வந்தவர்களை எப்படி சுழற்றி அடிக்குமோ, அப்படித்தான் வாசுவின் வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனை வந்தது. இருந்தாலும் அவர் எதற்கும் அசையவில்லை. தன்னுடைய கையில் கிடாருடன் நிறைய சினிமா அலுவலகங்கள் ஏறி இறங்கி இருந்தார். அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எல்லோருமே மறுத்து அவரை வெளியே அனுப்பி இருந்தார்கள். நிறைய கேலி, கிண்டல்கள் அவமானத்தை எல்லாம் சந்தித்தார். சில பேர், எதற்கு சினிமாவை தேர்ந்தெடுத்தாய்? ஊருக்கு செல் என்றெல்லாம் அறிவுரை சொல்லி இருந்தார்கள்.

சினிமா பயணம்:

வாசு வீழ்ந்தாலும் வாழ்ந்தாலும் சினிமா தான் என்று உறுதியாக இருந்தார். அந்த உறுதியின் தான் இவர் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக சேர்ந்தார். பின் இசையமைக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவுடன் கொஞ்சம் கொஞ்சமாக இயக்குனராக வேண்டும் என்ற கனவையும் சேர்த்துக் கொண்டார்.
அப்படித்தான் இவருக்கு வண்டிச்சக்கரம் என்ற படத்தில் ஒரு சீன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக இவர் இந்த படத்தில் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் உதவி இயக்குனராக இருந்து கொண்டு நடிக்கவும் செய்தார்.

சினிமா கனவு:

இவர் அமைதி படத்தில் சத்யராஜுக்கு அல்வா வாங்கி கொடுப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அதிலிருந்து தான் இவருடைய பெயருக்கு முன்னால் அல்வா வாசு என்ற அடைமொழி வந்தது. அதன் பின் மணிவண்ணன் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக வாசு தான் பணிபுரிந்து இருந்தார். சில படங்களுக்கு இவரே தனியாக காமெடி ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதிக் கொடுத்திருந்தார். இன்னொரு பக்கம் இவர் பல கதைகளை எழுதி வைத்துக்கொண்டு தயாரிப்பாளர் அலுவலகமும் ஏறி இறங்கி இருந்தார். இருந்தாலும் இவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இவர் முயற்சிகள் செய்து கொண்டாலும் இவருக்கான சப்போர்ட்டும் பொருளாதார உதவியும் கிடைக்கவில்லை.

வாசு மரணம்:

காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி இருந்தார். கிட்டத்தட்ட 900 படங்களுக்கு மேல் இவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தார். இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்த வாசு நடிகராக தான் ஆனார். 36 வருடங்கள் சினிமாவில் பயணித்தாலும் இவருக்கான அங்கீகாரமும் வாய்ப்புகளும் கிடைக்காததால் இவர் மீண்டும் தன்னுடைய சொந்த ஊரான மதுரைக்கே சென்று விட்டார். இதை அடுத்து கடந்த சில வருடமாகவே இவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் இவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்தார்கள். பின் இவருக்கு கல்லீரல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. மூச்சு விடவும் ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருந்தார். மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தான் இவருக்கு சிகிச்சை கொடுத்தார்கள். பண உதவி இல்லாததால் இவர் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். பின் 2017ல் இவர் இறந்தார்.

behindtalkies AMP · Quick view
View full