'எந்த வயதிலும் வாழ்க்கைத்துணை வேணும்' - சந்தோஷத்தில் புதுமாப்பிள்ளை நடிகர் பாலா பகிர்ந்த விஷயம்

By subhashini · 27/10/2024

தன்னுடைய திருமணம் குறித்து நடிகர் பாலா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்றுவிட்டார்.

பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இருந்தும் தமிழில் தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க முடியவில்லை. தற்போது இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் இருக்கிறார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அம்ருதாவை பாலா விவாகரத்து செய்தார்.

பாலா திருமணம்:

பின் மருத்துவரான எலிசபெத் என்பவரை பாலா இரண்டாவது திருமணம் செய்து இவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கலூர் பாவகுளத்தில் தனது தாய்மாமன் மகள் கோகிலா என்பவரை பாலா மணந்தார். பாலாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து இருந்தார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு நடிகர் பாலா அளித்த பேட்டியில், கோகிலாவின் அன்பால் என்னுடைய உடல் நலம் ரொம்பவே நன்றாக இருக்கிறது.

பாலா பேட்டி:

பழைய மாதிரி நான் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை துணை எந்த வயதிலும் தேவை. இந்த மாதிரி சூழலில் எனக்கு துணை நிற்கும் என் ரசிகர்களுக்கு நன்றி. கோகிலா தான் என்னுடைய வாழ்க்கை. சின்ன வயதிலிருந்தே ஒன்சைடா என்னை லவ் பண்ணிட்டு இருந்தாங்க. ஆனால், அது எனக்கு தெரியாது. கோகிலா வேற யாரும் இல்லை என்னுடைய சொந்த தாய் மாமா பொண்ணு. குழந்தையில் தூக்கி வளர்த்த பொண்ணு. நம்மள இந்த அளவு லவ் பண்ணி இருக்கா என்று தெரியவில்லை. அந்த மாதிரி கோணத்திலும் அவளை நான் பார்த்ததில்லை. ஒரு நாள் வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கும் போது, எனக்குன்னு யாருமே இல்லை என்று சொன்னேன்.

மனைவி குறித்து சொன்னது:

உடனே அவர் செய்து கொண்டிருந்த பெரிய வேலையை தூக்கி போட்டுவிட்டு என்னை பார்த்துக் கொள்ள ஓடி வந்து விட்டார். எனக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சூழலில் கடந்த ஒரு வருடமாக என்னை முழுக்க முழுக்க அவள்தான் கூடவே இருந்து பார்த்துக் கொண்டார். இது என்னுடைய இரண்டாவது திருமணம். என்னுடைய முதல் மனைவி அமிர்தா, இரண்டாவது மனைவி கோகிலா. இடையில் எலிசபெத் கூட லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தேன். அவங்க ரொம்ப அன்பானவர்கள். ஆனால், சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை.

சர்ச்சைகள் குறித்து சொன்னது:

அப்படி இருக்கும்போது நான் மூன்றாவது திருமணம் நான்காவது திருமணம் பண்ணிக் கொண்டேன் என்று சொல்வதெல்லாம் தப்பான தகவல். தேவை இல்லாமல் வதந்திகளையும் தவறான செய்திகளையும் பரப்பாதீர்கள். பத்து திருமணம் செய்து கொண்டேன் என்று கூட சொல்வார்கள். எதுவுமே உண்மை கிடையாது. என் மகளுக்கும் எனக்கும் இருப்பது தனிப்பட்ட விஷயம். அவளைப் பற்றி யாரும் தப்பாக பேசாதீர்கள். அரசியல்வாதிகளும், செல்வாக்கு மிக்கவர்களும் எனக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னிடம் 250 கோடி சொத்து இருக்கிறது. அதை பறிக்கத்தான் இவர்கள் இப்படி எல்லாம் நாடகம் நடத்துகிறார்கள் என்று பேசி இருந்தார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full