பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யும் கட்சிக்கு பிரசாரம் செய்ய ரெடி - கூல் சுரேஷ் ஆவேசம்

By subhashini · 6/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 91 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் டிக்கட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்றிருந்தார். பின் இந்த நிகழ்ச்சியில் நடந்த கார் டாஸ்க்கில் போட்டியாளர்கள் பார்வதி- கம்ருதீன் செய்திருக்கும் செயல்தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் 9:

இதை அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் எல்லோருமே கடுமையாக கண்டித்து இருந்தார்கள். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வந்தார்கள். பின் விஜய் சேதுபதி, பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் தான் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகரும் முன்னாள் போட்டியாளருமான கூல் சுரேஷ் அளித்த பேட்டியில், அந்த நிகழ்ச்சிக்கு போவது என்று முடிவெடுத்தால் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கணும்.

கூல் சுரேஷ் பேட்டி:

நான் எதுக்கு எல்லோருக்கும் எச்சரிக்கை விடுகிறேன் என்றால், நான் கலந்து கொண்ட சீசனில் நானா வாய்ப்பு கேட்டு போகவில்லை. அவர்கள் தான் கூப்பிட்டார்கள். நல்லவேளை நான் இப்படியெல்லாம் அசிங்கப்படாமல் வெளியில் வந்துவிட்டேன். அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என்று நாம ஒதுங்கினாலும் மொபைலை எடுத்தால் ஏதாவது ஒரு வீடியோ வந்து கொண்டே இருக்கிறது. அதனால் அப்பப்ப பார்த்தேன். சில போட்டியாளர்கள் ரொம்ப ஓவரா பண்றார்கள்.

பிக் பாஸ் பற்றி சொன்னது:

ரெண்டு நாள் முன்னாடி வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். வழியில் வயதான ஒரு அம்மாவும், அவங்க மகளும் என்னிடம் பேசினார்கள். அப்போ அவங்க மகள், இந்த சீசன் ரொம்ப ஓவரா இருக்கு என்று சொன்னார். சிலருக்கு சினிமாவில் சண்டை படங்கள் பிடிக்கும். அதே மாதிரி சண்டை காட்சிகள் பிடிக்கிற ஆடியன்ஸ் மட்டும் தான் இந்த சீசனை விடாமல் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். இது தேர்தல் நேரமாக இருப்பதால் இதை சொல்றேன். பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யணும். எந்த கட்சி அதை சொல்லுதோ அந்த கட்சிக்கு நான் பிரச்சாரம் செய்ய கூட ரெடி என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full