ஐயோ போச்சே போச்சே, எல்லாம் காணோம் சார் - வயற்றில் அடித்துக்கொண்டு புலம்பிய கஞ்சா கருப்பு

By subhashini · 25/1/2025

பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தான் வாடகை இருக்கும் வீட்டின் ஓனர் மீது புகார் அளித்திருக்கும் செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் கஞ்சா கறுப்பு. இவருடைய உண்மையான பெயர் கறுப்பு ராஜா. இவர் மதுரையை சேர்ந்தவர். இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த 'பிதாமகன்' படத்தில் கஞ்சா விற்பவராக கறுப்பு நடித்திருந்தார். இதனால் அவரை அனைவரும் கஞ்சா கருப்பு என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது கஞ்சா கருப்பு சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கஞ்சா கருப்புக்கும் அவரது வீட்டு உரிமையாளருக்கும் இடையில் சமீப காலமாக பிரச்சனை உண்டாகி அதன் காரணமாக சமீபத்தில் அவர் காவல் நிலையத்தில் தனது வீட்டு உரிமையாளர் மீது புகார் கொடுத்திருக்கிறாராம்.

கஞ்சா கருப்பு கொடுத்த விளக்கம்:

இந்த விஷயம் குறித்து கஞ்சா கருப்பு கூறுகையில், நான் இந்த வீட்டுக்கு குடி வந்து நாலு வருஷம் ஆயிடுச்சு. இந்த வீட்டுக்கு வாடகை 20,000 ரூபாய். போன மாசம் வரைக்கும் கரெக்டாக நான் வாடகை கொடுத்து வருகிறேன். இதுவரை வாடகை தாங்கன்னு அவருக்கு கேட்டதில்லை. அதற்கு முன்னாடியே நான் கொடுத்து விடுவேன். அதே மாதிரி வீட்ல ஏதாவது வேலையினாலும் சொன்னவுடனே என் வீட்டு உரிமையாளர் செஞ்சு கொடுத்திடுவார். சில சமயங்களில் நானே பண்ணிடுவேன்.

மனுஷன் திடீர்னு மாறிட்டாரு:

எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லாதான் போயிட்டு இருந்தது. ஆனா, என்ன ஆச்சுன்னு தெரியல அவர் திடீர்னு மாறிட்டாரு. திடீர்னு வந்து எனக்கு வீடு வேணும்னு வந்து கேக்குறாரு. நீங்க காலி பண்ணிட்டீங்க என்று சொல்கிறார். சரி கொஞ்சம் டைம் கொடுங்கனு அவர்கிட்ட சொன்னேன். அப்புறம் என்ன விசாரிச்சு பார்த்தா அவர் லீசுக்கு வீட்டை விட போறார்னு தெரிஞ்சுக்கிட்டேன். அந்த லீஸ்பணத்தை நான் கொடுக்கிறேன் என்று சொன்னால் கூட அவர் கேக்கல. என்னை வீட்டை விட்டு காலிப் பண்ண வைக்கிறதிலேயே அவர் குறியாக இருக்கிறார்.

பூட்டை உடைச்சுட்டாங்க:

சரி என்று நானும் வீட்டைத் தேட ஆரம்பிச்சிட்டேன். ஆனால், உடனே வீடு கிடைக்க மாட்டேங்குது. கிடைத்தால் காலி செஞ்சிடுவேன். இப்பவும் கிடைக்காமல் தேடிகிட்டு தான் இருக்கிறேன். சூழ்நிலை எப்படி இருக்க, வீட்ல ஆள் இல்லாத போது, அதாவது நான் மதுரையில் இருந்தப்ப என் வீட்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் போய் பொருட்களை எல்லாம் ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டு வெள்ளையடிச்சி இருக்காங்க. அவர் எதற்கு இப்படி செய்தார் என்று விசாரிச்சா, சினிமாக்காரங்க ஏமாத்தி வீட்டை ஆட்டைய போட்டுடுவாங்கன்னு பயப்படுகிறார் என்று கேள்விப்பட்டேன்.

கலைமாமணி விருது டாலரைக் காணோம்:

என் மூஞ்சை பார்த்தா ஏமாத்துறவன் மாதிரியா தெரியுது. நானே படம் எடுக்கிறேன் என்று சொந்த வீட்டை விற்று ஏமாந்த கதை ஊருக்கே தெரியும். நான் வீட்டைக் காலி செய்றேன்னு சொன்ன பிறகும் பூட்டை உடைத்தது என்ன நியாயம். என் வீட்டுக்குள்ள இருந்த என் கலைமாமணி விருது டாலரை எல்லாம் காணோம். அதான் போலீசுக்கு புகார் கொடுக்க வந்தேன். இனி போலீஸ் என்ன சொல்றாங்களோ அதைக் கேட்டுக் கொள்ளலாம் என்று கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full