பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய ஜெகன்- நடிகர் நகுல் பட விழாவில் நடந்த சிறப்பான சம்பவம்
'வாஸ்கோடகாமா' படத்தின் விழாவில் பயில்வான் ரங்கநாதனை ஜெகன் வெளுத்து வாங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நகுல். இவர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி இருந்த 'பாய்ஸ்' படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பின் இவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தன்னுடைய உடலை குறைத்து இருந்தார்.
அதன் பின் இவர் 'காதலில் விழுந்தேன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். அதற்குப் பின் இவர் வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. அதற்குப் பின் இவர் செய், எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும், இவர் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிலைத்து வைக்க போராடிக் கொண்டிருக்கிறார்.
வாஸ்கோடகாமா படம்:
இதனால் சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் நகுல். தற்போது இவர் அறிமுக இயக்குனர் ஆர் ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் 'வாஸ்கோடகாமா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமும் நீண்ட நாட்களாகவே வெளியாகாமல் முடக்கில் இருந்தது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் முடிவடைந்து ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு அருண் என்வி இசையமைத்திருக்கிறார்.
பட விழாவில் நடந்தது:
தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று இருக்கிறது. இதில் நகுல், கே எஸ் ரவிக்குமார், பயில்வான் ரங்கநாதன், ஜெகன் உட்பட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த விழாவில் நடிகை தேவயானியும் கலந்து கொண்டு இருந்தார். அப்போது விழாவில் ஜெகன், நகுல் அதிகமாக படிக்கவில்லை என்றாலும் அறிவாளியாக இருக்கிறார்.
ஜெகன் சொன்னது:
அதற்கு காரணம் எப்படி என்று நான் கேட்டதற்கு, அவர் யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கிறேன் என்றார். உடனே பயில்வான் ரங்கநாதன் குறுக்கிட்டு பேச வந்தார். அதற்கு ஜெகன், அய்யய்யோ நீங்க பேசுற மாதிரியான யூடியூப் வீடியோக்களை சொல்லவில்லை சார். அவர் நல்ல அறிவை வளர்க்கும் வீடியோக்களை பார்த்து பல விஷயங்களை கற்று தெரிந்து கொள்கிறார். உங்க யூடியூப் வீடியோக்களை பார்த்தால் தேவையில்லாதது தான் தெரிந்து கொள்ள முடியும். உங்க கமெண்ட்ஸ் ஆப் பண்ணிடுங்க என்று கிண்டலாக பேசியிருந்தார்.
பயில்வான் கொடுத்த பதிலடி:
அதற்கு பயில்வான், ஜெகன் ஏன் உருப்படாமல் இவ்வளவு நாளாக இருக்கிறார் என நினைத்தேன். ஆனால், அவருடைய வாய்க்கு தான் அவர் இப்படி இருக்கிறார் என்று தெரிந்தது. 'இந்தியன் 2' படத்தில் ஜெகன் நடித்ததை பாராட்டி தான் பேசினேன். அதை நான் இந்த இடத்தில் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஒரு படம் நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்று தான் சொல்ல முடியும். விமர்சகர்களை திட்டக்கூடாது என்று கோபத்தில் பொங்கி எழுந்திருந்தார். இதற்கு ஜெகன் பதிலடி கொடுத்திருந்தார். இதையெல்லாம் பார்த்து தேவயானி, நகுல் மட்டும் உள்ளுக்குள்ளே என்ன ஆகுமோ? கலவரம் வெடித்து விடுமோ? என்ற பதட்டத்தில் இருந்தார்கள். ஒரு வழியாக அவர்களுடைய பிரச்சனை பனிப்போர் போல முடிந்துவிட்டது.