சென்னைக்கு ஓடி வந்து மூட்டை தூக்கினேன், கார் கழுவினேன் - நடிகர் முனீஷ்காந்த் பற்றி பலரும் அறியாத தகவல்
சினிமா கேரியர் பற்றி நடிகர் முனீஷ்காந்த் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் முனீஸ்காந்த். ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் இவர் கலைஞர் டிவியில் நடந்த நாளைய இயக்குனர் என்ற குறும்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. இப்படி தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சூது கவ்வும், பீட்சா, ஈஸ்வரன், பேச்சுலர் போன்ற படங்களின் மூலம் கவனிக்கப்பட்டார். தற்போது இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.
சமீபத்தில் சுந்தர்.சி இயக்கி நடிப்பில் வெளியாகியிருந்த இந்த கேங்கர்ஸ் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் முனீஷ்காந்த் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று தந்திருந்தது. இதை தொடர்ந்தும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் முனீஷ்காந்த் , நான் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் ரொம்ப ஈடுபாடு இருந்தேன். எங்கள் வீட்டில் இத்தனை வருஷமாக இப்படியே இருக்கானே என்றெல்லாம் யோசித்து கவலைப்பட்டார்கள். அவங்க யோசித்ததும் சரிதான் என்று சொல்லுவேன். காரணம், என்னை சுத்தி இருக்கிறவர்கள் எல்லோருமே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நானும் ஊரிலேயே இருந்துட்டா எல்லா விஷயங்களும் மாறிவிடும் என்று யோசித்தேன். அப்போதான் வாழ்வோ சாவோ பார்த்துக் கொள்ளலாம் என்று சினிமா கனவோட சென்னைக்கு வந்து விட்டேன்.
முனீஷ்காந்த் திரைப்பயணம்:
ஒரு மஞ்ச பையை மட்டுமே தூக்கிக்கொண்டு சென்னை வந்தேன். அப்போ சென்னையில் எனக்கு ரூம் என்று எதுவும் கிடையாது. எனக்கு அந்த நேரத்தில் பெயிண்ட் அடிக்கிற வேலைதான் கிடைத்தது. பிரசாந்த் கூப்பிட்டதும் அப்படியே நான் டப்பிங் பண்ண போய் விட்டேன். நாளை இயக்குனர், நிகழ்ச்சி, குறும்படங்கள் அதிகமாக பிரபலமான சமயத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்த தலைக்கு 10 லட்சம் என்ற ஒரு குறும்படம் எனக்கு ஒரு சிறந்த நடிகருக்கான விருதை வாங்கி தந்தது. நான் வீட்டில் இருந்து வந்ததுக்கு பிறகு எல்லோருமே என் மேல் வெறுப்பு காண்பித்தார்கள். சொல்லப்போனால் எங்கள் வீட்டில் நான் தான் முதலில் கல்யாணம் பண்ணி வைக்க சொன்னேன்.
வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள்:
அப்போது என்னுடைய அப்பா, உன்னையே பார்த்துக் கொள்ள முடியவில்லை. இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க சொல்றியா? முதல்ல நல்ல நிலைமைக்கு வா என்று சொன்னார். நான் சென்னைக்கு வந்த போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்போ கேட்டரிங் வேலை எல்லாம் பார்ப்பேன். கார் கழுவி இருக்கிறேன். கோயம்பேட்டில் மூட்டை எல்லாம் தூக்கி இருக்கேன். இந்த வேலைகளை கவனிக்கும்போது இடையில் 10 நாள் சூட் வரும்போது போய்விடுவேன். அன்றாடம் கிடைக்கிற வேலைகளை நான் கவனித்துக் கொண்டேன். எனக்கு ஊரில் படங்கள் பார்க்கும்போது நடிகர்களுக்கு கைதட்டுவேன். நானுமே கைதட்டி இருக்கிறேன். அந்த கை தட்டல் தான் எனக்கு சினிமா மேல காதல் வருவதற்கு காரணம்.
https://www.youtube.com/watch?v=HAgaxcz8n4Y
சினிமா வாய்ப்பு:
நானும் அதே மாதிரி கைத்தட்டல் வாங்கணும் என்று சென்னைக்கு வந்தேன். ஆனால், அந்த கைதட்டல் வாங்குவதற்கு எவ்வளவு கஷ்டப்படணும் என்று அதற்கு பிறகு தான் புரிந்து கொண்டேன். அந்த வேலையில் தான் எனக்கு சினிமா மிதான காதல் இன்னும் தீவிரமானது. ஆனால், எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. அப்புகுட்டி, சூரி எல்லாமே எனக்கு அப்போதே ஆரம்பத்திலேயே பழக்கம். அவர்கள் மேலே வரும்போது நாமும் மேலே வருவோம் என்று எனக்குள்ள ஒரு நம்பிக்கை பிறந்தது. அப்போலாம் சினிமா ஆசையோடு தினமும் 10 ப்ரொடக்ஷன் கம்பெனிகளில் ஏறி இறங்குவேன். அங்கெல்லாம் போட்டோ கொடுக்கணும். இந்த மாதிரி போட்டோ கொடுக்கிறதுக்கு தினமும் 100 ரூபாய் வேணும். இந்த மாதிரி தேவைகளுக்காக நான் மற்ற வேலைகள் எல்லாம் பார்த்தேன்.
சினிமா ஆசை:
டப்பிங் பிறகு தான் எனக்கு முண்டாசுப்பட்டி படத்தோட வாய்ப்பு கிடைத்தது. முண்டாசுப்பட்டி படத்தை முதலில் குறும்படமாக எடுத்தார்கள். அதில் நான் குரல் கொடுத்தேன். அதற்கு பிறகு அதே கதையை படமாக பண்றாங்க என்று கேள்விப்பட்டதும் தயாரிப்பாளரை சந்தித்தேன். அப்படித்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லணும். சொல்லப்போனால், நான் சினிமாவில் வில்லனாக நடிக்கணும் என்று முதலில் ஆசைப்பட்டேன். ராம்குமார் என்னுடைய உடல் மொழியில் வேற மாதிரியான ஒரு விஷயத்தை கவனித்து என்னுடைய பயணத்தை மாத்தி விட்டார். சினிமா கஷ்டத்தின் உச்சத்தையும் அதனுடைய மறுபக்கத்தின் உச்சத்தையும் காட்டி இருக்கிறது. சினிமா எனக்கு கடவுள் மாதிரி என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.