நான் தமிழ், மலையாள ரசிகர்களின் விமர்சனத்தை தான் பார்ப்பேன், ஆனா இப்போ - ஹிட் 3 பட விழாவில் நானி சொன்ன விஷயம்
Hit 3 பட ப்ரொமோஷனின் போது தமிழ் மற்றும் மலையாள ஆடியன்ஸ் குறித்து நடிகர் நானி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நானி. இவர் தமிழில் நான் ஈ மற்றும் ஆஹா கல்யாணம் போன்ற சில படங்களில் தான் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இருந்தாலும், இவர் அதிகம் தெலுங்கு மொழி படங்களில் தான் நடித்து இருக்கிறார்.
மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இவர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் வெளியாகி இருந்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை டிவிவி தனய்யா தயாரித்திருந்தார். இந்த படத்தில் நானி உடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, அதிதி பாலன், சாய்குமார், சுபலேகா சுதாகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
நானி திரைப்பயணம்:
இதைத் தொடர்ந்து நானி அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹிட்: தேர்ட் கேஸ் (HIT: Third Case). இந்த படத்தை சைலேஷ் கொலனு என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்து இருக்கிறார். இந்த படம் மே 1ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று இருந்தது.
விழாவில் நானி சொன்னது:
இதில் கலந்துகொண்ட நானி, இந்த மேடையில் தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. நிச்சயமாக தமிழை முழுமையாக கற்றுக் கொண்டு ஒரு நாள் இங்கு வந்து பேசுவேன். தமிழ் சினிமா தான் என்னுடைய கேரியருக்கு வடிவம் கொடுத்தது. இதை நான் நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். 2012 ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்காக நான் சென்னையில் தான் தங்கியிருந்தேன். அப்போது இங்குள்ள மக்கள் என் மீது நிறைய அன்பை செலுத்தினார்கள். எப்போது நான் சென்னைக்கு வந்தாலும் அந்த அன்பை எனக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தமிழ், மலையாளம் ஆடியன்ஸ்:
மேலும், தெலுங்கு ரசிகர்கள் என் படம் நன்றாக இருந்தாலும் கொண்டாடுவார்கள், நன்றாக இல்லை என்றாலும் என் மீது வைத்திருக்கும் அன்பால் கொண்டாடுவார்கள். அதனால் என்னுடைய படங்கள் வெளியாகும் போது உண்மையில் நான் படம் எப்படி இருக்கிறது என்று தெரிவித்துக் கொள்வதற்காக தமிழ் மற்றும் மலையாள ஆடியன்ஸினுடைய விமர்சனத்தை தான் பார்ப்பேன். ஆனால், இப்போது தமிழ் மற்றும் மலையாள ஆடியன்ஸ் என் மீது வைத்திருக்கும் அன்பால் என்னுடைய படத்தை கொண்டாடுகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=Vbnqutzgu0M
ஹிட் 3 பற்றி சொன்னது:
அதனால் சரியான விமர்சனத்தை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் ஹிட் 1 அண்டு 2 படங்களை பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஹிட் 3 பாருங்கள். முதல் இரண்டு பாகங்களுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. ஹிட் 3 படத்தை பார்த்தால் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். இந்த படத்திற்காக பட குழு ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக உங்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.