'கோழைகளின் கடைசி வழி இதான்' - வைரலான தனது கும்ப மேளா புகைப்படங்கள் குறித்து பிரகாஷ்ராஜ் பதிலடி

By krithika · 30/1/2025

நடிகர் பிரகாஷ் ராஜின் காட்டமான பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ் ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார்.

இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், இவர் சமீப காலமாகவே பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி 'ஜஸ்ட் ஆஸ்கிங்' என்று பதிவிடும் பதிவுகள் பலமுறை இணையத்தில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. அதனால் பாஜக ஆதர்வாளர்கள் மற்றும் பிரகாஷ்ராஜ் இடையே எப்போதும் விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கும்.

கும்ப மேளா:

இந்நிலையில் பிரகாஷ் ராஜின் புகைப்படம் ஒன்று வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்த விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலரும் இதில் கலந்து கொள்ள வந்துள்ளனர். இதுவரை 10 கோடிக்கும் மேலானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

பிரகாஷ் ராஜ் புகைப்படம்:

இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று பலரும் கலந்துகொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகர் பிரகாஷ்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதைப் போல் புகைப்படம் ஒன்று பாஜக ஆதரவாளர்களால் வைரலாக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கன்னட சினிமாவின் பிரசாந்த் சம்பர்கி , பிரகாஷ்ராஜ் புனித நீராடுவதைப் போல புகைப்படத்தை பகிர்ந்து,' பிரகாஷ்ராஜ் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்று நம்புவதாக' தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரகாஷ் ராஜ் பதிலடி:

இதனால் கோபமடைந்த பிரகாஷ்ராஜ், வைரல் ஆன புகைப்படம் போலி என்று மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'மதவெறியர்கள், கோழைகளின் கடைசி வழி போலி செய்திகளை பரப்புவது தான். அவர்களின் புனித விழாவின்போது கூட போலி செய்திகளை பரப்புகிறார்கள். வெட்கக்கேடான செயல் இது. போலி புகைப்படத்தை பரப்பியவர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விளைவுகளை எதிர் கொள்ள தயாராக இருங்கள்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மீண்டும் சீண்டிய பிரகாஷ் ராஜ்:

அதனைத் தொடர்ந்து, பிரசாந்த் சம்பர்கி பிரகாஷ் ராஜ் குறித்த பதிவை தனது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கியுள்ளார். அதற்கும் பிரகாஷ்ராஜ், மகாவீரர் சம்பர்கி பயந்து போய், தனது கணக்கிலிருந்து போலி செய்திகளை நீக்கிவிட்டார் என்று பதிவிட்டுள்ளார். தற்போது பிரகாஷ் ராஜின் இந்த பதிவுகள்தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டும் , பேசப்பட்டும் வருகிறது. தற்போது பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

behindtalkies AMP · Quick view
View full