அப்பா இதுப்போல் நிறைய படம் பண்ணனும், பழைய மாதிரி வரணும்னு அம்மா சொன்னாங்க - சாமானியன் படம் குறித்து ராமராஜன் மகள் எமோஷனல் பேட்டி
தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். இவர் ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த காலத்தில் வெறும் அரை ட்ரவுஸரில் அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும். சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன்.
அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இன்னும் கரகாட்டக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அதற்கு பின் இவருக்கு பெரியதாக வாய்ப்புகள் வரவில்லை என்றவுடன் அரசியலில் களம் இறங்கி விட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'சாமானியன்'.
சாமானியன் படம்:
இந்த படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், கே.எஸ் ரவிக்குமார் உட்பட பல பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்கும் சாமானியனுக்கு கோபம் வந்தால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தான் படத்தில் இயக்குனர் காண்பித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ராமராஜனின் மகள் அருணா பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக ராமராஜனின் மகள், அருணா ராமராஜன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், நான் என்னுடைய அப்பா நடித்த சாமானியன் படம் பார்த்தேன். ரொம்ப எமோஷனலாகவும், ரொம்ப பெருமையாகவும் இருக்கு. நல்ல சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார். சமூக அக்கறை உள்ள காட்சிகள் காண்பித்திருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் கழித்து அப்பா நடித்தாலும் ஒரு தரமான படத்தில் நடித்திருக்கிறார். தான் யார் என்பதையும் நிரூபித்து விட்டார். தியேட்டருக்கு போனால் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்க்கிறார்கள்.
படம் குறித்து சொன்னது:
அப்பாவை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. அதே பாசத்தோடு தான் மக்களும் இருக்கிறார்கள். நான் படத்தை பார்த்து முடித்து தியேட்டரில் இருந்த சாமானியன் போஸ்டருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை என் அப்பாவிற்கு அனுப்பி, நீங்கள் ஜெயிச்சிடீங்க அப்பா, ஆல் தி பெஸ்ட் என்று சொன்னேன். அப்போது அவர் குரலில் பயங்கர சந்தோசம் தெரிந்தது. இனிமே அவருக்கு வெற்றி பயணம் தான். என்னுடைய தம்பி அருண் வெளிநாட்டில் இருக்கிறான். அங்கு படம் ரிலீஸ் ஆகவில்லை. அவன் இன்னும் படம் பார்க்கவில்லை. நான் எடுத்த வீடியோ எல்லாம் அனுப்பி இருந்தேன். ரொம்ப ஹாப்பி ஆகிவிட்டார்கள்.
ராமராஜன் குறித்து சொன்னது:
என் அம்மாவும் படம் பார்க்கவில்லை. ரொம்ப பிசியாக இருக்கிறார். படம் ஹிட் ஆனதில் அவர்களுக்கும் ரொம்ப சந்தோஷம். வீடியோ எல்லாம் பார்த்துவிட்டு உற்சாகமாகி விட்டார்கள். அவர் நிறைய படம் பண்ணனும், பழைய மாதிரி வரணும் என்றெல்லாம் சொன்னார். அதோடு இன்னொரு விஷயம், அப்பாவுக்கு இந்த மாதிரி ஜானரில் நடிப்பது ரொம்ப புதுசு. இப்போ டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி மாறிவிட்டார். அவர் இந்த மாதிரி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கணும் என்பது எங்களோட விருப்பம். அப்பா எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை. இப்போது எந்த மீடியா ஓப்பன் பண்ணினாலும் அப்பாவுடைய முகம் தான் தெரிகிறது. எல்லா டிவியிலும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்ப இருக்கிற 2கே கிட்ஸ்க்கு அவருடைய பேச்சு ரொம்பவே பிடிக்கு என்று சந்தோசத்தில் பேசி இருக்கிறார்.