என்ன ஆப்ரேஷன்னு சொன்னா நீங்க பயப்படுவீங்க, சிகிச்சைக்குப் பின் ஜெயிலர் பட நடிகர் வெளியிட்ட வீடியோ

By krithika · 1/1/2025

சிகிச்சைக்குப் பின் பிரபல நடிகர் சிவராஜ்குமார் பகிர்ந்திருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட நடிகர் சிவராஜ்குமார் தமிழில் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக, நரசிம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு 'தளபதி 69' திரைப்படத்திலும் சிவராஜ்குமார் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. கடைசியாக சிவராஜ்குமார் நடிப்பில் 'பயரதி ரணகல்' என்னும் கன்னட படம் வெளியானது.

இந்த படத்தின் பிரமோஷன் பேட்டிகளில், சிவராஜ்குமார் தனக்கு உடல் ரீதியாக பாதிப்பு இருப்பதாகவும், அது குறித்து ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி அச்சப்படுத்த விரும்பவில்லை என்றும், சிகிச்சைக்காக டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து அமெரிக்கா சென்ற சிவராஜ்குமாருக்கு கடந்த 24 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள மியாமி கேன்சர் இன்ஸ்டியூட்டில் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு சிவராஜ்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சிவ ராஜ்குமார் மனைவி சொன்னது :

அதில், முதலில் பேசியிருக்கும் சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா, சிவ ராஜ்குமாருக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது, அவர் புற்றுநோயிலிருந்து மீண்டு இருக்கிறார். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் அவர் இப்போது புற்றுநோயிலிருந்து மீண்டு இருக்கிறார். சிவராஜ்குமாரின் அனைத்து அறிக்கைகளும் பயப்படும் வகையில் இல்லை என்றும், அவர் அதிகாரபூர்வமாக புற்றுநோயிலிருந்து விடுபட்டு விட்டதாகவும் மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by DrShivaRajkumar (@nimmashivarajkumar)

சிவ ராஜ்குமார் பேசியது:

அதைத்தொடர்ந்து பேசிய நடிகர் சிவராஜ்குமார், நான் அமெரிக்காவிற்கு வரும்போது சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். நான் எப்போதும் பேசும்போது உணர்ச்சிவசப்படக் கூடியவன். ஆனால், எனக்கு மன தைரியத்தை என் ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கொடுத்த தைரியத்தால்தான் நான் நிம்மதியாக இருந்தேன். இந்தக் கடுமையான நேரத்தில் என் மனைவி கீதா, எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். என் வாழ்நாள் முழுவதும் கீதா இல்லாமல் சிவாண்ணா இல்லை. அவர் கொடுப்பது போன்ற அன்பு வேறு யாரிடமும் எனக்கு கிடைக்காது.

சிகிச்சை குறித்து :

அதேபோல் தான் என் மகள் நிவேதித்தாவும் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். புற்றுநோயிலிருந்து நான் குணமடைய மருத்துவர்கள் எனக்கு பக்க பலமாக இருந்தனர். எனக்கு நடந்த ஆபரேஷன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்ல. என் சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு, செயற்கையாக மாற்றப்பட்டது. என்ன ஆப்ரேஷன் நடந்தது என்று சொன்னால் அனைவரும் கவலைப்படுவீர்கள் என்று நினைத்தோம். அதனால்தான் அது பற்றி யாரிடமும் நாங்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது நான் மிகவும் நலமாக இருக்கிறேன்.

விரைவில் பணிக்கு திரும்பவேன் :

மேலும், நான் ஜனவரி மாதம் இறுதியில் இந்தியா வந்து விடுவேன். மார்ச் மாதத்திற்குப் பிறகு முழுமையாக பணிக்கு திரும்புவேன். நான் மீண்டும் வருகிறேன். முன்பு சிவாண்ணா எப்படி இருந்தாரோ, அதேபோல் நடனம், சண்டைக் காட்சிகள் மற்றும் தோற்றத்தில் இரண்டு மடங்கு பவர் இருக்கும். உங்கள் ஆசிர்வாதத்தால் நான் எப்போதும் ஆற்றல் நிறைந்தவனாக இருப்பேன் என்று சிவராஜ்குமார் உருக்கமாக வீடியோவில் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை கண்டு அவரின் ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீரோடு விரைவில் வீடு திரும்ப அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full