அப்பா, தங்கை திமுக, ஆனால் என்றும் தான் ஒரு தளபதி ரசிகன் என்று நிரூபித்த நடிகர் சிபி ராஜ்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்று இவர் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சி சார்பில் 234 தொகுதிகளும் நிற்கப்போகும் வேட்பாளர்களையும் அறிவித்து இருந்தார். தவெக தனித்து போட்டியிடுகிறது.
விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும், விஜய் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். தேர்தல் நாள் நெருங்கி வருவதால் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாற்றி மாற்றி விஜய் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் திமுகவிற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜூம், அவரது மகள் திவ்யா இருவரும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், விஜய்க்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் பலரும் இறங்கி இருக்கிறார்கள்.
சிபிராஜ் பதிவு:
அந்த வகையில் நடிகரும், சத்யராஜ் மகனும், விஜயின் தீவிர ரசிகருமான சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இவர் வேளச்சேரி தவெக வேட்பாளர் குமார் அவர்களை ஆதரித்து கூட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகிறது. இது தொடர்பாக எமோஷனலாக சிபி சத்யராஜ் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அன்புள்ள விஜய் அண்ணா உங்களை முதன் முதலில் நான் சந்தித்தது 1993 ஆம் ஆண்டு ஒரு ஓட்டலில் தான். அப்பாவினுடைய பிறந்தநாள் விழாவிற்காக எஸ்.ஏ சந்திரசேகர் சார், கேப்டன் விஜயகாந்த் அங்கிள் எல்லோருடனும் நீங்கள் வந்திருந்தீர்கள். அப்போது அமைதியாக இருந்த இந்த இளைஞர் பின்னாளில் என்னையும் சேர்த்து கோடிக்கணக்கான இதயங்களை வென்று ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்று எனக்கு தெரியாது.
விஜய் பற்றி சொன்னது:
நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை எங்களால் இன்னுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் ஒரு ரசிகனாக நடிகனாக தம்பியாக நண்பனாக உங்களின் புதிய பாதையை தேர்ந்தெடுத்த முடிவை மதிக்கிறேன். நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன். இத்தனை ஆண்டுகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ என்னுடைய வாழ்க்கையில் நீங்களும் ஒரு முக்கியமாக பங்காற்றி இருக்கிறீர்கள். உங்களின் மீது உள்ள அன்பால் ஒன்றிணைந்த பலருமே எனக்கு நெருங்கிய நண்பர்களாக மாறியிருக்கிறார்கள்.
விஜய் அரசியல்:
என்னுடைய காதலியாக இருந்து மனைவியான ரேவதியுடன் நான் சென்ற முதல் டேட்டிங் பிரியமானவளே படம் தான். உங்களுக்கு போட்டியாக இருக்கும் மற்ற பெரிய நடிகர்களின் ரசிகர்களிடம் என்னுடைய நண்பர்களிடம் உங்களுக்காக நான் செய்த ஆரோக்கியமான விவாதங்கள் பல இருக்கிறது. உங்களின் வெற்றிகளை என்னுடைய சொந்த வெற்றிகளை போலவே கொண்டாடி இருக்கிறேன். என்னுடைய படத்தின் விழாவிற்கும், என்னுடைய படங்கள் வெற்றி பெற வாழ்த்து நீங்கள் செய்யும் அழைப்புகள், எப்போதுமே நான் அழைத்தாலும் நான் மெசேஜ் செய்தாலும் நீங்கள் உடனடியாக தரும் பதில்கள் இவை அனைத்துமே என்னுடைய வாழ்வினுடைய பொக்கிஷமான நினைவுகள்.
நான் ஒரு சினிமா பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் நான் திரைக்குள் நுழைவதற்கு நீங்கள் தான் ஒரு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தீர்கள். உங்களுடைய படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல உண்மையான காதல் நட்பு கடின உழைப்பின் மதிப்பை எங்களுக்கு கற்றுக் கொடுத்தது. உங்களுடைய குட்டி ஸ்டோரிகள் வாழ்க்கையை பற்றி ஆழமான புரிதலை அளித்தது. கடந்த மூன்று சகாப்தங்களாக எங்களை மகிழ்வித்து ஊக்கப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி அண்ணா. திரையில் நீங்கள் கொடுத்த அந்த அற்புதமான தருணங்களை நாங்கள் எப்போதும் நெஞ்சில் சுமப்போம். வென்று வா தலைவா நாங்கள் இருக்கோம் என்று கூறி இருக்கிறார்.