இந்த படம் ஓடுதோ, இல்லையோ, ஆனால் - '3BHK' பட விழாவில் நடிகர் சித்தார்த் உருக்கம்
3BHK பட விழாவில் நடிகர் சித்தார்த் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பலர் நடித்திருந்தார்கள். இதை அடுத்து கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த் நடித்து இருந்தார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்- கமல் எடுத்தார்கள்.
சித்தார்த் திரைப்பயணம்:
இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. சங்கர் திரைப்பயணதிலேயே இந்த படம் பெரும் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. அதன் பின் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த மிஸ் யூ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
இதை அடுத்து கடைசியாக சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த படம் டெஸ்ட்.
டெஸ்ட் படம்:
YNOT ஸ்டுடியோ தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. சசிகாந்த் தான் டெஸ்ட் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா, மாதவன், மீரா ஜாஸ்மின் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 3BHK.
https://www.youtube.com/watch?v=e-WnOLMscdI
3BHK படம்:
இந்த படத்தை எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜூலை நான்காம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அருண் விஷ்வா தயாரித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினருடன் மாரி செல்வராஜ், ரவிக்குமார், ரவிமோகன், இயக்குனர் ராம், டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் உட்பட பலருமே கலந்து கொண்டிருந்தார்கள்.
விழாவில் சித்தார்த்:
அப்போது விழாவில் பேசிய நடிகர் சித்தார்த், இந்த மாதிரியான ஒரு நல்ல படம் என்னுடைய நாற்பதாவது படமாக அமைந்திருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. முதல் படத்தில் என்னுடைய வெற்றிக்காக என்னுடைய அப்பா, அம்மா எனக்கு நிறைய செய்தார்கள். இப்போது என்னுடைய நாற்பதாவது படம் நல்லா இருக்கணும் என்று தயாரிப்பாளர், இயக்குனர் நிறைய பண்ணுகிறார்கள். என்னைப் பற்றி எனக்காக இங்கு நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு யார் என்ன சொல்கிறார்கள், படம் ஓடுதா, இல்லையா என்பதை எல்லாம் தாண்டி படத்தை பார்த்துவிட்டு, என்ன நடந்தாலும் கவலை இல்லை. நல்ல படம் பண்ணிட்டோம் என்று நாங்கள் நினைக்கிறோம். நல்ல படம் பண்ண மன நிறைவு இப்போது இருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கும் அந்த மனநிறைவு கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்.