மூன்று படங்களின் அப்டேட், தானே இயக்கும் படம், பாகுபலி கதை? சிம்பு சொன்ன சுவாரசிய தகவல்

By subhashini · 4/2/2025

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அந்த வகையில் சிம்பு நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது கமல் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக் லைப்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இது சிம்புவின் 48வது படம்.

இதை அடுத்து சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தினுடைய போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இதை அடுத்து சிம்புவின் 50ஆவது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை நீண்ட நாட்களாகவே எந்த அறிவிப்பும் இல்லாமல் வைத்திருந்தார்கள். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. தற்போது இந்த படத்தை சிம்புவே தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- சிம்பு கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.

சிம்பு படங்கள்:

இது முழுக்க முழுக்க சரித்திர கதைகளம் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து சிம்புவின் 51-வது படத்தை
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த படத்திற்கு காட் ஆப் லவ் என்று பெயரிடப்பட்டது.
சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டரும் வெளியாகியிருந்தது. மேலும், சில தினங்களுக்கு முன்பு தான் சிம்புவின் பிறந்தநாள் வந்திருந்தது. சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக இந்த மூன்று படத்தினுடைய அறிவிப்புமே வெளியாகியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சிம்பு உடன் மூன்று இயக்குனர்களும் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பேசி இருந்தார்கள்.

தேசிங்கு பெரியசாமி:

இந்த படம் நடக்கவே நடக்காது, சாத்தியமற்றது என்றெல்லாம் பேசி இருந்தார்கள். அந்த சமயத்தில் தான் சிம்பு, நம்ம இதை நடத்திக் காட்டணும் என்று சொன்னார். 2023 ஆம் ஆண்டு இந்த படத்தினுடைய கதையை நான் சிம்பு சாருக்கு சொன்னேன். இப்போ ரெண்டு வருஷத்துக்கு பிறகும் இந்த கதை மேல இருக்கிற அவருடைய ஆர்வம் குறையவே இல்லை. எந்த தருணத்திலும் நம்பிக்கையை இழக்கவில்லை. நான் கதை சொல்லும் போது சொன்ன வசனங்களை எல்லாம் இன்னைக்கும் அவர் ஞாபகம் வைத்திருக்கிறார்.
நான் அவருடைய பிறந்தநாளுக்கு 12 மணிக்கு போன் பண்ணி வாழ்த்து சொன்னேன். அப்போதும் அவர் இந்த படத்தினுடைய போஸ்டர் டிசைன் பத்தி தான் பேசிட்டு இருந்தார். ஒரு படத்துக்காக இவ்வளவு டெடிகேஷன் ஆக இருப்பதால்தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது என்று கூறியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா:

சிம்புவின் ஐம்பதாவது படத்தோட கதையை கேட்டதுமே எனக்கு எதிர்பார்ப்பு வந்துவிட்டது. என்னுடைய பிரதருக்காக நல்ல வேலைகளை பண்ணுவேன். எனக்கு சில வடிவிலான இசையை பயன்படுத்தணும் என்று கனவுகள் இருக்கு. அது எல்லாம் இந்த படத்தில் பண்ணலாம் என்று இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சிம்பு:

ரொம்ப இடைவெளி ஆகிவிட்டது. இப்ப இந்த விஷயங்கள் எல்லாம் சரியான நேரத்தில் வந்து அமைந்திருக்கிறது. என்னுடைய ஐம்பதாவது படத்துக்கான வேலைகளை முதலில் தொடங்கும் போது இந்த 51வது படத்தை எடுக்க முடியுமான்னு சந்தேகம் எங்களுக்குமே இருந்தது. அதற்கு பிறகு கமல் சாரோட தயாரிப்பு நிறுவனம் படத்துக்குள் வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. நம்ம எதிர்பார்த்த மாதிரி படம் வராமல் போய்விடும் என்று தான் நாங்களே தயாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் என்பதால் கொஞ்சம் ரிஸ்க் ஃபேக்டரும் அதிகம். இந்த பெரிய படத்துக்கு எல்லோரும் இப்ப வரைக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். இந்த இடைவெளி எதிர்பார்த்து நடக்கவில்லை என்பதை நான் என்னுடைய ரசிகர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

ரசிகர்களும் இந்த நிலைமையை புரிந்துகொள்ளனும் என்று ஆசைப்படுகிறேன். தேசிங்கு இத்தனை நாள் காத்திருக்கிறார். அவரை விட்டுட்டு நான் வேறுபடத்துக்கு எப்படி போக முடியும்? வெளியில் இருக்கிறவர்கள் இந்த திரைப்படத்தை பாகுபலி மாதிரியான திரைப்படம் என்று நினைக்கிறார்கள். அந்த எண்ணமே எங்களுக்கு கிடையாது. இந்த கதை தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கிற மாதிரியான படைப்பாக இருக்கும். இந்த படம் வெளியில் வருவதற்கு நாங்கள் சிரத்தை கொடுத்து உழைக்கணும். அதனால்தான் நேரமாகுது. அதேபோல் என்னுடைய 51 வது படத்தை நான் இயக்கனும் என்று நினைத்தேன். அதை அஸ்வந்த் எடுத்துக்கொண்டார். என்னுடைய 60வது படத்தை நான் இயக்குவேன் என்று கூறியிருந்தார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full