இவர்களுக்கு பதில் சொல்ல நான் வரவில்லை - சினிமாவில் தனக்கு ஏற்பட்ட வலிகளை பகிர்ந்த சிவகார்த்திகேயன்

By subhashini · 7/1/2025

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இதை அடுத்து தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சிவகார்த்திகேயன் பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன், நான் எப்போதும் இந்த சினிமா துறையை
குறை சொன்னதே கிடையாது. நான் இந்த சினிமா துறையில் இருக்க வேண்டும். ஆனால், அதனுடைய அழுத்தம் என்னுடைய குடும்பத்தை பாதிக்கக் கூடாது. காரணம், அவர்கள் எல்லோருமே சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒரு முறை நான், எனக்காக பொறுத்துக் கொண்டது போதும் என்று என்னுடைய குடும்பத்திடம் சொன்னேன்.

https://www.youtube.com/watch?v=5a_FurEo7IA

குடும்பம் பற்றி சொன்னது:

அப்போது என்னுடைய மனைவி, எதுவும் இல்லாமல் தொடங்கி இன்று இந்த அளவிற்கு வந்திருக்கிறீர்கள். அஜித் சார், விக்ரம் சாருக்கு பிறகு சாதாரண மனிதர் சினிமாவில் பெரிதாக வரவே இல்லை. நீங்கள் இந்த அளவிற்கு சாதனை செய்திருக்கிறீர்கள். நீங்கள் செய்தது சாதாரண விஷயம் இல்லை. எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் அதைப் பற்றி கவலையும் கொள்ளாதீர்கள் என்றெல்லாம் சொல்லியிருந்தார். 20 வருடத்தில் நான் பெரிதாக செய்துவிட்டேன் என்று சொல்லவில்லை. இந்த நிலைமைக்கு வந்து இருப்பதை தான் நான் அப்படி சொல்கிறேன்.

சினிமா பற்றி சொன்னது:

கடைசி ஐந்து வருடம் எனக்கு ரொம்ப கடினமான காலம். சம்பளம் பற்றி எல்லாம் யோசிக்காமல் சரியான படம் கொடுக்க வேண்டும், தோல்வி இருந்தாலும் அதை சரிப்படுத்திக் கொண்டு மீண்டு எழ வேண்டும் என்று தான் என்னுடைய கவனம் இருந்தது. ஒரு சாதாரண ஒருவன் பெரிய வளர்ச்சிக்கு வரும்போது சில பேர் தான் பாராட்டுகிறார்கள். ஆனால், சிலருக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை. எதனால் இவன் வருகிறான்? இவனிடம் என்ன இருக்கிறது? ஏன் இவன் வருகிறான்? என்று பல கேள்விகளை எனக்கு நேரே கேட்டிருக்கிறார்கள். நான் இந்த மாதிரியான விஷயங்களை பலமுறை சந்தித்து இருக்கிறேன்.

தன்னை எதிர்ப்பவர்களுக்கு பதில்:

அந்த கேள்விகளுக்கெல்லாம் நான் என்னுடைய சிரிப்பின் மூலம் கடந்து விடுவேன். நான் அவர்களுக்கு எந்த பதிலையும் திருப்பி சொல்லக்கூட மாட்டேன். சொல்ல போனால், என்னுடைய வெற்றி அவர்களுக்கான பதில் என்று கூட சொல்ல மாட்டேன். என்னுடைய வெற்றி என்பது அண்ணா உங்களைப் போல நானும் வரவேண்டும் என்று சொல்பவர்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும், மக்களுக்கும் தான் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார். தற்போது சிவா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம், சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படம், சிபி சக்கரவர்த்தி படம் என்று பிசியாக வலம் வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full