சீரியலில் ரீப்ளேஸ்மென்ட் ரோல்ன்னாவே மோசமாக நடக்குறாங்க - உண்மையை உடைத்த நடிகர் ஸ்ரீ குமார்

By subhashini · 25/10/2025

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த தொடரில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் சிபு சூர்யன். இந்த சீரியலில் நடிகர் பொன்வண்ணன், பிரவீனா, சாயா சிங் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் கடந்த சில தினங்களாக இந்த தொடரில் இருந்து ஹீரோ வெற்றி கதாபாத்திரத்தில் நடித்த சிபு சூர்யன் விலகி இருக்கும் தகவல் தான் வைரலாகி இருக்கிறது.

சீரியல் விறுவிறுப்பாக செல்லும் நேரத்தில் சிபு வெளியேறியது பலருக்குமே பேரதிர்ச்சி தான். இவர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும், இவருக்கு பதில் இந்த தொடரில் யாரடி நீ மோகினி, வானத்தைப்போல போன்ற தொடர்களில் நடித்த ஸ்ரீகுமார் தான் நடிக்கிறார். இந்த சீரியலில் நடிக்கும் சாயாசிங் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் சிபு சூர்யன் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.

கெட்டிமேளம் சீரியல்:

இது தொடர்பாக சிபு சூர்யன் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த சீரியலில் வெற்றி கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கிறார் ஸ்ரீகுமார். இது தொடர்பாக ஸ்ரீகுமார் அளித்த பேட்டியில், ரீப்ளேஸ்மெண்ட் கேரக்டர் என்றாலே நிறைய பேர் ஓடி விடுவார்கள். நடிக்கவே தயங்குவார்கள். காரணம், அவர்களுக்கு விமர்சனம் எப்படி வரும் என்றெல்லாம் யோசிப்பார்கள். இதை நானே பார்த்திருக்கிறேன். அதுவும் சுமாரான சீரியல், கொஞ்சம் ஹிட் சீரியல் என்றாலும் ரொம்ப பயப்படுவார்கள்.

சிபு சூர்யன் விலகல்:

எங்க நாம போன பிறகு சீரியல் ஓடவில்லை என்றால் பலி நம்ம மேல விழுந்திடுமோ என்றெல்லாம் யோசிப்பார்கள். ஆனால், எனக்கு என்னவோ அடுத்தடுத்து அந்த மாதிரி வாய்ப்புகள் வந்தது. நான் ரெண்டு விஷயத்தை யோசித்துப் பார்க்கிறேன். ஒரு சீரியல் நல்லா போய்க்கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு சூழலில் ஹீரோ விலகினார் என்றால் தயாரிப்பு தரப்பு அவர் போகக்கூடாது என்று தான் நினைக்கும். ஆனால், எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஹீரோவை போய் எவ்வளவு தான் தாங்க முடியும்.
அதனால் அந்த சீரியல் முடிந்தது என்றால் அந்த சீரியலால் வாழ்க்கை கிடைத்திருந்த எத்தனையோ பேர் பாதிக்கப்படுவாங்க நினைத்து பார்ப்பேன்.

ஸ்ரீகுமார் பேட்டி:

இரண்டாவது விஷயம் நாம் அந்த கேரக்டருக்கு எவ்வளவு உண்மையாக நடிக்கிறோமோ அதை பொருத்தி வரவேற்பும் கிடைக்கும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். நம்ம மேல நம்பிக்கை இருக்கிறப்போ எதுக்கு கமெண்ட் எல்லாம் பார்த்து பயப்படணும். யாரடி நீ மோகினி, வானத்தைப்போல ரெண்டுமே நான் நடிக்க வந்த பிறகு ரேட்டிங்கில் இறங்காமல் கடைசிவரை அதே விறுவிறுப்புடன் ஒளிபரப்பானது. அதனால் யார் என்ன சொன்னாலும் அதை புறந்தள்ளிவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்னுடைய வேலை.

சீரியல் பற்றி சொன்னது:

இதில் இன்னொரு மோசமான விஷயமும் இருக்கு. அதாவது ஒரு நடிகர் நடித்து ஹிட் ஆகியிட்ட சீரியலில் அவர் வெளியேறிய பிறகு வேறொருவர் வந்தால் சிலர் இருக்கிறார்கள், அந்த சீரியல் தொடர்ந்து நல்லா போறதை அவங்க விரும்பவில்லை. அவர்களே ஆள் செட் பண்ணி சீரியல் பற்றியும் புதுசா வந்த நடிகர்களை பற்றியும் அவதூறாக அள்ளி விடுகிறார்கள். இந்த போக்குதான் நல்லதில்லை என்று சொல்கிறேன். இதற்கு பயந்து தான் பலருமே ரீப்ளேஸ்மென்ட் கேரக்டர் என்றால் நடிப்பதற்கு பயந்து ஓடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full