வித்தியாசமான ஹாரர் சயின்ஸ் பாணியில் வெளிவந்த 'ஹவுஸ்மேட்ஸ்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஹவுஸ்மேட்ஸ். இந்த படத்தில் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜி, வினோதினி மற்றும் தீனா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை எஸ். விஜய பிரகாஷ், சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. ஹாரர், சயின்ஸ் பிக்சன் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் வீட்டை எதிர்த்து தர்ஷன், ஆர்ஷா ஆகியோர் காதல் திருமணம் செய்கிறார்கள். இவர்கள் ஒரு பழைய பிளாட்டை லோன் போட்டு வாங்கிறார்கள். அதில் சில அமானுஷ்ய விஷயங்கள் எல்லாம் நடக்கிறது.
ஒரு கட்டத்தில் ஆர்ஷா அந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று ரொம்பவே பயப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் இன்னொரு குடும்பமும் தங்களுடைய வீட்டில் வசிப்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. அப்படி வசிக்கும் காளி வெங்கட், வினோதினி ஜோடி தர்ஷன்- ஆர்ஷாவை பேய் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு சுவர் மூலமாக இருவருமே மாற்றி மாற்றி பேசிக் கொள்கிறார்கள். அப்போது காளி வெங்கட் தம்பதியினர் 2012 ஆம் ஆண்டிலும், தர்ஷன் தம்பதியினர் 2022 ஆம் ஆண்டிலும் ஒரே வீட்டில் வசித்திருப்பது தெரிய வருகிறது. இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நிறைய பிரச்சனைகள் புது புதிதாக வருகிறது. யாராவது ஒருவர் வீட்டை விட்டு காலி செய்ய வேண்டிய நிலை வருகிறது. கடைசியில் என்ன ஆனது? யார் வீட்டை விட்டு காலி செய்தார்கள்? உண்மையாலுமே பேய் இருக்கிறதா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.
படத்தில் ஒரே வீட்டில் இரண்டு காலகட்டங்களில் வசிக்கும் அவுட்ஸ்மேட்ஸை வைத்து இயக்குனர் கொண்டு சென்று இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். பேய், அறிவியல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தையுமே இந்த படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜவேல். காதல் எதிர்ப்பு, திருமணம் என்று வழக்கமான
கதையாக தான் படம் ஆரம்பத்தில் நகர்கிறது. அதற்குப்பின் அவர்கள் செல்லும் வீட்டில் தான் பிரச்சனை தொடங்குகிறது. ஆரம்பத்தில் அமானுஷ்ய விஷயங்கள் வருவதால் பேய்தான் வீட்டில் உலவுவது போல இருக்கிறது.
மேலும், இடைவெளிக்கு பிறகு தான் ஒரே வீட்டில் இரண்டு காலங்களில் வசிக்கும் இரண்டு குடும்பங்கள் இருப்பது தெரிய வருகிறது. அவர்களுக்கிடையே நடக்கும் பிரச்சினைதான் இயக்குனர் காமெடியாகவும் சுவாரசியமாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியை சென்டிமென்டில் இயக்குனர் முடித்திருப்பது நன்றாக இருக்கிறது. படத்தில் ஹீரோ தர்ஷன், காளி வெங்கட், வினோதினி, ஆர்ஷா ஆகியோர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. வீட்டுக்குள் பேய் தான் இருக்கிறது என்று அவர்கள் செய்யும் பிரார்த்தனை, வழிபாடுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பல காட்சிகள் சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் வகையில் இருக்கிறது. தர்ஷன், காளி வெங்கடின் நடிப்பு படத்திற்கு பலத்தை கொடுத்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு நன்றாக தான் இருக்கிறது. ஒரு வித்தியாசமான கதையை இயக்குனர் குழப்பம் இல்லாமல் நேர்த்தியாக கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஆனால், இரண்டு காலகட்டங்களை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெரிதாக இரண்டு காலகட்டத்திற்கும் மாற்றம் தெரியவில்லை. இது பேய் கதையும் இல்லை, அறிவியல் கதையும் இல்லை. கொஞ்சம் வேற மாதிரி விஞ்ஞான ரீதியில் ஃபேண்டஸியாக இயக்குனர் சொல்ல முயற்சித்து இருக்கிறார். மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் நடிப்பு
வித்தியாசமான கதைக்களம்
கிளைமாக்ஸ் அருமை
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை படம் நேர்த்தியாக சென்று இருக்கிறது
பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.
குறை:
இரண்டு காலகட்டங்களையும் வித்தியாசப்படுத்தி இருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் ஹவுஸ்மேட்ஸ் - வித்தியாசமான ஹாரர் சயின்ஸ் படம்