ஏதோ பேருக்கு வந்த கட்சி இல்லன்னு நிரூபிப்போம் - மாநாடு குறித்து விஜய் அதிரடி அறிக்கை

By subhashini · 4/10/2024

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடிற்கான பந்தக்கால் விழா முடிந்தவுடன் தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வைத்து இருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு இருபவர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று தன் கட்சிக்கு பெயரை அறிவித்திருந்தார். அதோடு, வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றியிருந்தார். அந்த கொடியில் வாகை மலரும், இருபக்கம் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. பலரும் விஜய்யின் கட்சி கொடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். தற்போது மாநாட்டிற்கான வேலையை தான் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் டி.எஸ்.பியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் மனு கொடுத்து இருந்தார்.

மாநாடு குறித்த தகவல்:

பல தடைகளுக்கு பின் மாநாட்டிற்கான அனுமதி கிடைத்து இருக்கிறது. இதில் கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் என பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும், விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெற இருக்கிறது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் த.வெ.க. மாநாட்டின் பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்று இருகிறது. அதிகாலை 4:30 மணியிலேயே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

பந்தக்கால் விழா:

இதில் இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் ஆகிய அனைத்து மதங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட புனித நீரை வைத்து பூஜை நடத்தி இருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழக்கத்திற்கு மதங்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய் இதை செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பந்தக்கால் விழா முடிந்தவுடன் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை நடிகரும், கட்சி தலைவருமான விஜய் அவர்கள் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம் கூட இல்லை.

விஜய் வெளியிட்ட அறிக்கை:

ஏனெனில், நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம். தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை, அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக, உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல். இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே? நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா. இப்படிச் சொல்லும்போதே, ஓர் எழுச்சி உணர்வு, நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது, தன் தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான். இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.

தொண்டர்களுக்கான கோரிக்கை:

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும். நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை, இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால். அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர்.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர். மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம். இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளைத் தொடங்கித் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன். இந்நிலையில், மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோசத் தருணங்களை இப்போதே மனம் அளவிடத் தொடங்கிவிட்டது. வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full