12ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல் தான் 'மதகஜராஜா' - நன்றி தெரிவித்து விஷால் வெளியிட்ட அறிக்கை
மதகஜராஜா படம் தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி இருந்தது. சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது. மேலும், மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றுள்ளது. இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உட்பட பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சென்னையில் உள்ள கோயில்களுக்கு சென்று விஷால் தரிசனம் செய்திருந்தார்.
விஷால் அறிக்கை:
அதுவும் சைக்கிள் ஓட்டிக் கொண்டு எல்லாம் கோவிலுக்கு சென்றிருந்தது இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. கடந்த வாரம் இந்த படத்தை தெலுங்கிலும் வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் மதகஜராஜா படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை குறித்து சந்தோஷத்தில் விஷால் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், 2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் "மதகஜராஜா" திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறும் நேரம் இது.
மதகஜராஜா திரைப்படம் பெரும் உழைப்பாலும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு இதே பொங்கல் திருநாளில் வெளிவர தயாராக இருந்த சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத சில காரணங்களாலும் பட நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து படக் குழுவினர்களுக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று தெரியாமலே அன்று படம் வெளிவர முடியாமல் போனது. அதனை தொடந்து நானும், அன்பிற்கினிய சகோதரர் இயக்குநர் திரு.சுந்தர்.C அவர்களும் சோர்வடையாமல் ஒவ்வொரு வருடமும் வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுத்து வந்தோம்.
12ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் மக்களிடம் பிரசித்தி பெறுவதை போன்று அதே எதிர்பார்ப்புடன் 12ஆண்டுகள் கடந்து வெளியான மதகஜராஜா' திரைப்படமும் மக்களின் பேராதரவு பெற்று பல கோடி வசூலையும் கடந்து மக்கள் குடும்பங்களுடன் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாடிய 2025 ஆண்டின் முதல் வெற்றி பெற்ற இப்படம், மாபெரும் வசூல் படைத்த திரைப்படமாக திரையுலகில் கால் பதித்தது. சினிமா வரலாற்றில் ஒரு நல்ல திரைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், அத்திரைப்படம் வெளியிட முடியாமல் பல ஆண்டுகள் கடந்து எப்போது திரையில் வந்தாலும் மக்களின் பேராதரவு உண்டு என்பதற்குமதகஜராஜா' திரைப்படம் ஒரு சான்று.
2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் #மதகஜராஜா திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி
— Vishal (@VishalKOfficial) February 5, 2025
வணக்கங்கள்#BlockbusterMadhaGajaRaja#MGR #MyDearLoveru#SundarC… pic.twitter.com/1IzCuiM6W7
அதே போன்று இன்னும் வெளிவராமல் இருக்கும் பல படங்களுக்கு இத்திரைப்படம் முன்மாதிரியாகவும் அவர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும் வகையிலும் இருந்து வருகிறது. என்னை ஒரு பாடகராக ஏற்று #MyDearLoveru பாடலுக்கு பேராதரவு வழங்கியமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்நாள் மிகவும் முக்கியமான மறக்க முடியாத நாளாக இருக்கிறது. பல தடைகளை தாண்டி நான்கு வலிமையான தூண்கள் உதவியுடன் மதகஜராஜா' திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்று பல கோடி வசூல் சாதனை படைத்தது போல், பல தடைகளை தாண்டி தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பாதையில் பயணிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மதகஜராஜா' திரைப்படம் போன்று உங்களை மகிழ்விக்கும் நல்ல திரைப்படங்களை வழங்கிடுவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.