'இதனால்தான் நான் அதில் உறுப்பினராக இல்லை' - மலையாள நடிகர் சங்கம் AMMA குறித்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி சொன்ன பகீர் தகவல்
நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி, இதுவரை மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் சேராதது குறித்து பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென் இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவர் 2017 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படத்தின் மூலம்தான் திரை உலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். பின் விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த 'ஆக்ஷ்ன்' என்ற படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகம் ஆகி இருந்தார்.
மேலும், இவர் ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக்கியது 'பொன்னியின் செல்வன்' படம்தான். இந்த படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி அட்டகாசமாக நடித்திருந்தார். தற்போது இவர் தமிழில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடிக்கும் 'தங் லைப்' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது இவரின் 25 ஆவது படமாகும்.
ஹேமா கமிட்டி:
இது ஒரு பக்கம், சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து, கடந்த 19ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுமே பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது. இது குறித்து கேரளா சினிமா உலகில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.
பிரபலங்கள் கருத்து:
பின் இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக இதுவரை மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார்கள் ஆன மோகன் லால், மம்மூட்டி எதுவுமே பேசவில்லை. இதை அடுத்து மலையாள திரைப்பட சங்கமான அம்மா சில தினங்களுக்கு முன் தான் கலைக்கப்பட்டது. பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க அம்மா சங்கம் கூடுவதாக இருந்த நிலையில், மோகன் லால் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்து விலகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா குறித்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி:
இந்நிலையில் நிபுணர் ஒருவர், கேரளாவில் முன்னிலை நாயகியாக இருந்தும், இதுவரை கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் சேராதது ஏன் என்று ஐஸ்வர்யா லெக்ஷ்மியிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அம்மா அமைப்பில் சேர வேண்டும் என்று எனக்கு தோணவில்லை. இதுபோல் அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் எல்லாம் நான் எனது மூணாவது சினிமாவில் இருந்து எதிர்கொண்டு வருகிறேன். அப்போதிருந்தே நான் இதை நோட்டம் விட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். நான் அம்மா அமைப்பில் சேர்ந்தால் கூட, எனக்கு எந்த ஒரு உதவியும் தீர்வும் கிடைக்கும் என்று தோணவில்லை.
பெண்கள் பதவிக்கு வர வேண்டும் :
அதை நான் அவர்களின் நடவடிக்கைகளில் இருந்தே தெரிந்துவிட்டது. அதனால் அம்மா இயக்கத்தில் சேர எனக்கு ஒரு வலுவான எண்ணம் தோணவில்லை என்று கூறியுள்ளார். மேலும், அவர் அம்மா அமைப்பின் நிர்வாகிகள் ராஜினாமா செய்து உள்ளதால் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதிலிருந்து நழுவி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். திரைத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் அம்மா அமைப்பில் பதவிக்கு வர வேண்டும் என்றும், அந்த அமைப்பில் உயர் பதவிகளில் பெண்கள் வரவேண்டும் என்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி தெரிவித்துள்ளார்.