பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோயினாக நான் நடிக்க வேண்டியது, ஆனால் - அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்
பரியேறும் பெருமாள் படம் தொடர்பாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து இருந்த பிரேமம் படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படத்தின் மூலம் தான் அனுபமா சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து இருந்தது. பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடித்த கொடி என்ற படத்தில் அனுபமா நடித்து இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார்.
அனுபமா திரைப்பயணம்:
பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமா தமிழில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பின் அனுபமா அவர்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் இயக்கத்தில் வெளியாகி இருந்த ட்ராகன் படத்தில் அனுபமா நடித்திருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருந்தது.
பைசன் படம்:
இதை அடுத்து இவர் தில்லு ஸ்கொயர் என்ற படத்திலும் நடித்திருந்தார். அதன் பின் சமீபத்தில் வெளியான ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாள படத்தில் அனுபமா நடித்து இருந்தார். இந்த படத்தில் சுரேஷ்கோபி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது நடிகை அனுபமா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பைசன். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தான் இயக்கி வருகிறார்.
அனுபமா பேட்டி:
இந்த படத்தில் ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் எடுத்து இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பைசன் படம் தொடர்பாக நடிகை அனுபமா அளித்த பேட்டியில், பரியேறும் பெருமாள் படத்தினுடைய கதையை இயக்குனர் மாரி செல்வராஜ் என்னிடம் சொன்னார்.
பரியேறும் பெருமாள் படம்:
அப்போது நான் பல தெலுங்கு படங்களில் கமிட் ஆகி இருந்தேன். அதனால்தான் நடிக்க முடியாமல் போனது. அதற்காக நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். அடுத்து அவருடைய மாமன்னன் படத்திலும் நடிக்க கேட்டார் அப்போதும் என்னால் சூழ்நிலை காரணமாக நடிக்க முடியாமல் போனது. ஆனால், பைசன் படத்திற்காக என்னை அழைத்த போது உடனே நான் ஒத்துக்கொண்டேன். இந்த படமும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.