'எதிர்நீச்சல் 2' சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகை மதுமிதா - காரணம் இதுதான்
எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் 'எதிர்நீச்சல்' சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்தது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த சீரியலை 'கோலங்கள்' சீரியல் இயக்கிய திருச்செல்வம் இயக்கியிருந்தார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டமும், பெண்களுக்கான உரிமையை மையமாகக் கொண்ட கதைதான் எதிர்நீச்சல்.
மேலும், ஆண் ஆதிக்கம் கொண்ட நபர்களின் மத்தியில் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதை சொல்லும் வகையில் இந்த சீரியல் இருந்தது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் முதலில் மறைந்த நடிகர் மாரிமுத்து தான் நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் திடீரென்று இருந்து விட்டார். பின் அவருக்கு பதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்திருந்தார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலின் டிஆர்பி திடீரென்று குறைய தொடங்கியது.
எதிர்நீச்சல் சீரியல்:
மேலும், குணசேகரன் கதாபாத்திரத்தை மாற்றியதால் தான் இந்த சரிவுக்கு காரணம் என்று பலருமே கூறியிருந்தார்கள். பின் இந்த சீரியலின் டிஆர்பி குறையவே திடீர் என்று சீரியலை முடித்து விட்டார்கள். இது மக்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலர் 'எதிர்நீச்சல் 2' சீரியல் வருமா என்று தற்போது வரை கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை மதுமிதா போட்டிருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மதுமிதா.
மதுமிதா குறித்து:
கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில், கன்னடத்தில் சில சீரியல்கள் மற்றும் சினிமாக்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு கன்னடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு தெலுங்கு சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியல் ஹிட்டானது மூலம் தான் இவர் பிரபலமானார். தமிழில் இவர் நடித்த இரண்டாவது சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. மறைந்த நடிகர் மாரிமுத்து மூலம் இந்த சீரியல் பட்டித் தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. மதுமிதாவிற்கு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திரைப்படங்கள், சினிமா வெப் சீரியஸ் வாய்ப்புகள் வந்ததாக கூறப்படுகிறது.
மதுமிதா பதிவு:
இந்நிலையில், நடிகை மதுமிதா தனது instagram பக்கத்தில் போட்டிருக்கும் பதிவுதான் வைரல் ஆகி வருகிறது. அதில், நான் புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கப் போகிறேன். அதனால், 'எதிர்நீச்சல்' சீரியலின் இரண்டாவது பாகத்தில் நான் நடிக்கப் போவதில்லை. பல்வேறு காரணங்களால் அதிலிருந்து நான் விலகுகிறேன். இதுவரை எனக்கு அன்பும், ஆதரவும் அளித்து வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அடுத்த ஒரு புதிய கட்டத்தில் அடி எடுத்து வைக்கப் போகிறேன்.
எதிர்நீச்சல் 2:
அதற்கும் அதே அன்பையும், ஆதரவையும் எனக்கு நீங்கள் தர வேண்டும் என்று மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். மதுமிதா போட்டிருக்கும் இந்த பதிவு ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் ' எதிர்நீச்சல் 2' கண்டிப்பாக வரப்போகிறது என்பதை நினைத்து மறுபக்கம் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், எதிர்நீச்சல் 2 தொடரிலிருந்து மதுமிதா விலகிய நிலையில் கன்னிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்பியா இசை, சபரி பிரசாந்த், பாம்பே ஞானம் மற்றும் டி.கே கலா உட்பட பலர் கமிட் ஆகி உள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.