மீண்டும் ஹஜ் புனித பயணம் சென்றுள்ள மும்தாஜ், கண்ணீர் மல்க வெளியிட்டிருக்கும் வீடியோ இதோ
நடிகை மும்தாஜ் மதீனாவில் இருந்து பேசிப் பகிர்ந்திருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை கவர்ச்சி நடிகைகள் பலர் வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மும்தாஜ். இவர் 1999 ஆம் ஆண்டு இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய “மோனிஷா என் மோனோலிசா” என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
அதனை அடுத்து இவர் விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியாகியிருந்த குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். அதிலும் அந்த படத்தில் 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து இவர் மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, எல்லாம் காதலா, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, ஏழுமலை, லண்டன், வீராசாமி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருந்தார்.
மும்தாஜ் குறித்து:
இருந்தாலும், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே சினிமாவிலிருந்து இவர் விலகினார். அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் மும்தாஜ் 91 வது நாளில் வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மும்தாஜ், புர்காவில் மட்டுமே காணப்படுகிறார்.
https://www.youtube.com/shorts/v-jceZtulyY
ஆன்மீகத்தில் ஈடுபட்டார் :
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அல்லா என் வாழ்க்கையை மாற்றி விட்டார். அல்லாஹ்வைத் தவிர எனக்கு எதுவும் தேவையில்லை என்று பேசி இருந்தார். 44 வயதாகும் மும்தாஜ் இதுவரையில் திருமணம் செய்யாமலேயே இருக்கிறார். இந்நிலையில், ஹஜ் பயணம் சென்றுள்ள நடிகை மும்தாஜ், மதீனாவில் இருந்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் மீண்டும் மதீனாவில் இருக்கிறேன். அதற்காக நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மும்தாஜ் வீடியோ :
மீண்டும் அவர் என்னை ஒரு விருந்தாளியாக இங்கே வரவைத்து இருக்கிறார். எனக்கு எப்படி அல்லாஹ்விற்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. நான் அழுது கொண்டிருக்கிறேன். நான் பயத்தில் அழுது கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக இங்கு இது என்னுடைய கடைசி பயணமாக இருக்கக் கூடாது. அதற்காக நான் வெட்கமில்லாமல் அழுகிறேன். நான் கீழ்படியாதவளாக இருந்திருக்கிறேன். நீங்கள் அல்லாஹ்விடம் மனம் உருகி வேண்டிக் கொண்டால் ஒருநாள் கண்டிப்பாக இங்கு வருவீர்கள்.
ரசிகர்களின் வேண்டுகோள்:
உங்களுக்காக நான் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் இன்று கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். நடிகை மும்தாஜ் ஏற்கனவே பலமுறை இதுபோல் ஹஜ் பயணம் மேற்கொண்டு , வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்தாஜ் வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அவரின் ரசிகர்கள் அவரிடம் எங்களுக்காகவும் துவா(பிராத்தனை) செய்யுங்கள் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.