சச்சின் ரீ-ரீலிஸ் கொடுத்த பிரபலம் - ஜெனிலியா தோழியாக நடித்த ரஷ்மியின் நெகிழ்ச்சி வீடியோ
விஜயின் சச்சின் ரீ - ரீலீஸ் குறித்து ஜெனிலியாவின் தோழியாக நடித்த ரஷ்மி போட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் சச்சின். இந்த படத்தில் ஜெனிலியா, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை ஜான் மகேந்திரன் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தானு தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதனால் இதை கொண்டாடும் விதமாக இந்த படத்தை உலகெங்கும் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு ரீ-ரீலீஸ் செய்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் சச்சின் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
சச்சின் படம்:
மேலும், இந்த படத்தில் ஜெனிலியாவின் தோழியாக ஸ்மிருதி ரோலில் நடித்திருந்தவர் நடிகை ரஷ்மி. இந்த படத்தில் இவர் வரும் காட்சிகள் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ரஷ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், கடந்த சில தினங்களாகவே என்னை நினைவில் வைத்து வீடியோக்களை வைரலாக்கி வருகிறார்கள். இயக்குனர் ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா உட்பட பலர் நடித்த சச்சின் படத்தினுடைய ரீ ரிலிசை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ரஷ்மி வீடியோ:
உங்களில் பலருமே இந்த படத்தை தியேட்டருக்கு சென்று மீண்டும் பார்த்து உங்களுடைய அன்பை கொடுத்து வருகிறீர்கள். அந்த படத்தில் நான் சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தேன். என்னை நீங்கள் கண்டுபிடித்து பெரிய அளவில் என்னை பிரபலப்படுத்தி பாராட்டுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னை போன்றவர்கள் வெளியே மீண்டும் வருவதற்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கிறது. அதற்காக நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சச்சின் படத்தில் நான் நடித்திருந்த ஸ்மிருதி கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்த விதம்தான் உங்கள் அனைவர் மத்தியிலும் என்னை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நம்புகிறேன்.
சச்சின் படம் பற்றி சொன்னது:
உண்மையான நட்புக்கு இடையில் இருக்கும் எளிமை, நட்புக்காக எப்போதும் துணை நிற்பது, சரியானதை தேர்வு செய்ய உதவியாக இருப்பது என்று படத்தில் ஸ்மிருதி கதாபாத்திரத்தை காண்பித்திருப்பார்கள். அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த படத்தில் வரும் கதாபாத்திரம் போல் தான் நான் என்னுடைய நண்பர்களுடன் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறேன். நீங்களும் கூட அப்படித்தான் உங்கள் நண்பர்களோடு இருப்பீர்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு அப்போது 20 வயது. நான் ரொம்ப சின்ன பெண். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.
https://www.youtube.com/shorts/3JfiVzVthOI
நன்றி வீடியோ:
அப்போதுதான் சச்சின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. நானும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்போது அந்த பழைய நினைவுகள் எல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தால் மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. அதை போல் உங்களது வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக அனைவருக்குமே நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். பிரசாந்த் என்பவர் சச்சின் படத்தில் நான் வரும் இடங்களை மட்டும் எடுத்து ரீல்ஸ் போட்டு வைரல் ஆக்கிவிட்டார். என்னுடைய நண்பர்கள் பலரும் அதை எனக்கு பகிர்ந்து இருக்கிறார்கள். அதை நான் மனதார பாராட்டுகிறேன். அனைவருக்கும் ரொம்ப நன்றி என்று கூறியிருக்கிறார்.