10 நாட்களுக்கு முன்பு கூட அவர் இதை சொன்னார் - நடிகை வடிவுக்கரசி எமோஷனல் - என்ன ஆச்சு?
நடிகர் ராஜேஷின் மறைவு பற்றி நடிகை வடிவுக்கரசி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் ராஜேஷ். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். ராஜேஷ் அவர்கள் முதன்முதலில் பள்ளி ஆசிரியராகத்தான் பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் சினிமாவில் நடிக்க வந்தார். இவர் 70,80 காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர்.
இவர் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை கிட்டத்தட்ட 150 க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
ராஜேஷ் குறித்த தகவல்:
மேலும் இவர் படங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலுமே நடித்திருக்கிறார். இவர் நடிகர் என்பதை தாண்டி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருந்தார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் 2024 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியாகியிருந்த மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இதுதான் இவருடைய கடைசி படம். சமீப காலமாக இவர் youtube சேனலை தொடங்கி அதில் ஆரோக்கியம் மற்றும் ஜோதிடம் தொடர்பான பல தகவல்களை பகிர்ந்து இருந்தார்.
https://www.youtube.com/watch?v=_6cYgEW_Xdk
ராஜேஷ் மறைவு:
இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாகவே இவர் உடல்நல குறைவால் அவஸ்த்தை பட்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை உடல்நிலை குறைவால் நடிகர் ராஜேஷ் காலமாகி இருக்கிறார். இவருடைய மறைவு தமிழ் திரை உலகில் பெரும் பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு இடையே இவர் ஜோன் சில்வியா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருடைய மனைவியும் உடல்நிலை குறைவால் 2012 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு திவ்யா, தீபக் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=D_EcYP9UW0Y
வடிவுக்கரசி பேட்டி:
தற்போது ராஜேஷ் உடைய உடல் சென்னை ராமபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து அவருடைய மகள் வந்ததுமே அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ராஜேஷின் நினைவுகள் பற்றி அவர் உடன் பணியாற்றிய நடிகை வடிவுக்கரசி அளித்த பேட்டியில், நடிகர் ராஜேஷ் ரொம்ப நல்ல மனிதர். என்னுடைய பிறந்த நாளை நான் மறந்துவிட்டாலும் அவர் மறக்கவே மாட்டார். தவறாமல் முதலில் வந்து வாழ்த்து சொல்லிவிடுவார். நான் எந்த படப்பிடிப்பில் இருக்கின்றேனோ அங்கு வந்து எனக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிப்பார்.
https://www.youtube.com/watch?v=YQBqvXZmeBw
ராஜேஷ் பற்றி சொன்னது:
ஒருமுறை காரைக்குடியில் சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னை அழைத்து சென்று புடவை வாங்கி கொடுத்தார். கடைசி நிமிடம் வரை நீங்கள் நடித்துக் கொண்டிருப்பீர்கள் என்று சொல்வார். பத்து நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டைக்கு சென்று வந்தேன். என் பையனுக்கு பெண் பார்த்து விட்டோம். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் கல்யாணம் செய்து விடுவேன் என்று சொன்னார். என் மகன் கல்யாணத்திற்கு நல்ல பட்டு புடவை வாங்கி தருகிறேன் என்றும் சொன்னார். கன்னி பருவத்திலே படம் வெளியான நாளை இன்னும் ஞாபகம் வைத்து வருடம் தோறும் அது தொடர்பாக என்னிடம் பேசுவார். எல்லா விஷயங்களையும் சரியாக செய்யக்கூடிய நபர். எனக்கு ஒரு நல்ல நண்பன். அவருடைய மறைவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, என்னால் நம்பவும் முடியவில்லை என்று கண்கலங்கி எமோஷனலாக பேசியிருக்கிறார்.