மேக்கப், ஹேர்ஸ்டைல், புடவை, டான்ஸ்ன்னு 24 மணி நேரமும் யோசித்துக் கொண்டே இருப்பேன்- 'வசந்த மாளிகை' நாயகி வாணிஶ்ரீ

By subhashini · 7/1/2025

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் சிவாஜிகணேசன். இவருடைய நடிப்பிற்கு யாரும் இணை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்றும் இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் சிவாஜி கணேசனின் நடிப்பில் 1972 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் தான் வசந்த மாளிகை. இந்த படத்தை கே.எஸ் பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசன் உடன் வாணிஸ்ரீ நடித்திருந்தார்.

இந்த படம் தெலுங்கில் வெளியான பிரேம் நகர் படத்தின் உடைய தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தை மறுபடியும் ரீலீஸ் செய்து இருக்கிறார்கள். இந்த படம் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக படத்தின் நாயகி வாணிஸ்ரீ அளித்த பேட்டியில், வசந்த மாளிகை படத்தில் நான் நடித்த போது எனக்கு 17 வயது.

வசந்த மாளிகை படம்:

படம் முடிந்து ரிலீஸ் ஆகும் போது தான் 18 வயது. தெலுங்கில் பிரேம் நகர், தமிழில் வசந்த மாளிகை. ரெண்டு மொழியிலும் நான்தான் கதாநாயகி. தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அந்த படம் தான். தமிழில் வசந்த மாளிகை எடுக்கணும்னு நினைத்தார்கள். அப்போது ஜெயலலிதாவை தான் ஹீரோயினியாக செலக்ட் பண்ணி இருந்தார்கள். ஆனால், அந்த நேரத்தில் ஜெயலலிதாவோட அம்மா இறந்து விட்டதால் அவரால் ஷூட்டிங்க்கு வர முடியவில்லை. அதற்குப் பிறகுதான் தயாரிப்பாளர் என்னை நடிக்க வைத்தார்.

வாணிஸ்ரீ பேட்டி:

சிவாஜி என்ற இமயமலை பக்கத்தில் நான் ஒரு சின்ன ஐஸ் கட்டி தான். அதனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அப்போது எங்க அம்மா, ஒரு சாவித்திரி, ஒரு சரோஜாதேவி மாதிரி ஒரே வாணிஸ்ரீ தான். நீ யாருக்கும் குறைச்சல் இல்லை. உன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக பண்ணு என்று எனக்கு நிறைய மோட்டிவேட்டெல்லாம் பண்ணினார்கள்.

வசந்த மாளிகை பட அனுபவம்:

அந்தப் படத்தில் கமிட் ஆன உடனேயே என்னோட நடிப்பு, ஃபிகர், மேக்கப், ஹேர்ஸ்டைல், புடவை, டான்ஸ் என்று எல்லாத்தையும் வித்தியாசமாக காட்டணும் என்று 24 மணி நேரமும் யோசித்துக் கொண்டே இருப்பேன்.
டான்ஸ் எல்லாம் ஒரு மாதத்துக்கு முன்னாடியே ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பித்து விட்டேன். அந்த நேரத்தில் தான் எனக்கு லவ் எதுவும் இல்லை. அதனால் போனில் பேசிக் கொண்டே இருக்கிற பழக்கமும் என்னிடம் இல்லை. அப்போது என்னுடைய நினைப்பு முழுவதுமே வசந்த மாளிகை, வசந்த மாளிகை என்று தான் இருந்தது.

சினிமா பற்றி சொன்னது:

அதே மாதிரி என்னோட தமிழ் பேசுற விதமும் எல்லோருக்கும் பிடித்திருந்தது என்னுடைய கதாபாத்திரத்திற்கு நான் தான் குரல் கொடுப்பேன் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். சிவாஜி சார் என்னோட தமிழை பார்த்து ஆச்சரியப்பட்டு ரொம்ப பெருமையாகவும் பேசி இருந்தார். என்னை பொறுத்த வரைக்கும் நான் சினிமாவுக்காக படைக்கப்பட்டேன். இந்த ஜென்மத்தில் இல்லை பல ஜென்மமாக சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டு நடிகையாக முடியாமல் இறந்து போய் இருப்பேன் என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த ஜென்மத்தில் நடிகையாகி விட்டேன். இதோ வசந்த மாளிகை ரிலீஸ் ஆகி 52 வருடம் கழித்து இப்பவும் அந்த படம் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அது நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full