சீமான் மூலமாக முயற்சிக்கிறாங்கனு நினைக்கிறேன் - ம.நீ.மை கட்சியில் இருந்து விலகிய வினோதினி சொன்ன விஷயம்
'மக்கள் நீதி மய்யம்' கட்சியிலிருந்து திடீரென்று விலகிய நிலையில் நடிகை வினோதினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்த 'ஏங்கேயும் எப்போதும்' திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வினோதினி. ஆனால், அதற்கு முன்பு இவர் 'காஞ்சிவரம்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது வரை சிறந்த குணசித்திர நடிகையாக திகழ்ந்துவரும் வினோதினி கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம் ' கட்சியில் இணைந்து இருந்தார்.
ஆனால், திடீரென்று அந்தக் கட்சியிலிருந்து வருத்தத்தோடு வெளியேறுவதாக சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது குறித்து தற்போது அளித்துள்ள பேட்டியில் வினோதினி, நான் மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன் என்று பதிவிட்டதும், கட்சியில் ஏதோ பிரச்சனை என்று எல்லாரும் பதறுவீங்கன்னு தெரியும். ஆனால், நான் வெறும் பரபரப்புக்காக அப்படி செய்யல. ஒரு வேலையை செய்யணும்னு ஆர்வத்தோட போறோம். கொஞ்ச நாள் கழிச்சி அதுல ஒரு சோர்வு தெரிகிறது. அந்த இடத்துல இருக்கிறவங்க நம்மை கேக்குறாங்களோ இல்லையோ, நமக்கே கொஞ்சம் உறுத்தல் வரும் இல்லையா. அந்த மாதிரி எனக்கும் உறுத்தல் வந்தது.
கட்சியில் இருந்து விலகியது குறித்து:
அதனால் அந்த நிலையைத் தொடர வேண்டாம் என்று தான் கட்சியிலிருந்து நீங்கினேன். கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். அப்போ எல்லாம் பெருந்தன்மையோட எனக்குப் புரிய வச்சாங்க. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பல நிகழ்ச்சிகளை துவக்கிக் வைக்க என யாருக்கும் கிடைக்காத பல வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தது . ஆனால், நான் எதையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இதற்காக நான் யாரையும் குறை சொல்ல முடியாது.
மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்.
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) January 29, 2025
அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை - எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம்…
முடிவுக்கு காரணம் அழுத்தமா:
குறிப்பாக கடந்த ஒன்றரை வருஷம் என்னுடைய உழைப்பும், பணமும் என்னுடைய சொந்த வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெரு விலங்குகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு மட்டுமே போயிருக்கு. இதைத் தாண்டி ஒருவேளை செய்யணும்னு நினைச்சுட்டு அதை செய்ய முயற்சிக்காத சோம்பேறியாக இருந்தால் நல்லா இருக்காது. அதனாலதான் நான் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். மத்தபடி எனக்கு எந்தவித அழுத்தங்களும் இல்லை.
கமல் மற்றும் விஜய் குறித்து:
மேலும், சமீபத்திய முக்கிய பிரச்சினைகளான அண்ணா பல்கலை மாணவி விவகாரம், பரந்தூர் விமான நிலைய விவகாரம் என எந்த விவகாரம் குறித்தும் கமல் பேசவே இல்லையே என சிலர் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அங்கங்க கேள்வியை எழுப்பிட்டு தான் இருக்காங்க. எல்லாத்துக்கும் தலைவர் தான் பேசணும்னு எதிர்பார்க்க முடியாது இல்லையா. ஆனாலும், ஒரு கட்சியின் அடிப்படை உறுப்பினராக எனக்கு இந்த வருத்தம் இருந்தது. அவர் கொஞ்சம் பேசி இருக்கலாம் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதே மாதிரி இப்ப விஜய் அரசியலுக்கு வந்திருக்காரு. யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம். வந்த பிறகு செயல்பாடு எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும்.
சீமான் மூலமாக முயற்சிக்கிறாங்க:
மேலும், இப்ப எங்க பாத்தாலும் பெரியார் பத்தி தான் பேச்சு. பெரியார் அவர் காலத்தில் பெரிய ஆளுமையா இருந்திருக்கிறார். தமிழர்கள், தெலுங்கர்கள் என்று பார்க்காமல் திராவிடம் என்று அவர் போராடினார். சில சமயங்களில் சீமானின் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு இல்லை. என்னைக் கேட்டால் பிஜேபி தான், இப்ப பெரியாரைத் தொட்டா திராவிட கட்சிகளைக் காலி செய்யலாம்னு நினைச்சு அண்ணன் சீமான் மூலமா அதுக்கு முயற்சிக்கிறாங்களோனு தோணுது என்று வினோதினி பேசியிருக்கிறார்.