சினிமா கேரியர் முதல் குடும்பம் வரை- தன் வாழ்க்கை குறித்து மனம் திறந்த பழம்பெரும் நடிகை ஒய். விஜயா
தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான பழம்பெரும் நடிகையாக இருந்தவர் ஒய். விஜயா. இவர் நடிகை மட்டும் இல்லாமல் கிளாசிக்கல் நடன மங்கையும் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை சீரியல் பக்கம் வந்துவிட்டார். பெரும்பாலும் இவர் படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். ஆனால், சமீபகாலமாக இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒய் விஜயா, நான் என்னுடைய மகள், பேரனுடன் ஹைதராபாத்தில் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இத்தனை வருடமும் நான் சென்னையில் தான் இருந்தேன். என்னுடைய பொண்ணு அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் தான் வந்தார். ஒரு காலகட்டத்தில் நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் என் மகளுடன் இருக்க முடியவில்லை. இப்போது அவருடன் இருக்கிறேன். இப்பவும் நான் படங்களிலும், விளம்பர விளம்பரங்களிலும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஒய் விஜயா பேட்டி:
நான் என்னுடைய 14 வயதில் நடிக்க வந்தேன். ஆரம்பத்தில் கதாநாயகியாக தான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். பிறகு காமெடி, வில்லி, கிளாமர் என்று பல கதாபாத்திரங்களில் நடித்தேன். எந்த படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரம் பேசணும் என்று பார்ப்பேன். அதனால் தான் இப்போது வரைக்குமே ஒரு பிசியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் நான் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். அதில் 'ஆடி வெள்ளி' என்ற படம் என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான படம். அப்ப நான் தெலுங்கில் ரொம்ப பிசியாக இருந்தேன்.
ஆடி வெள்ளி படம் குறித்து சொன்னது:
ராமநாராயணன் சார், என்னம்மா தமிழ் எல்லாம் நடிக்க மாட்டீங்களா? என்று கேட்டார். அதனால் தான் இந்த படத்தில் உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். டெக்னாலஜி இல்லாத காலகட்டத்திலேயே யானை, குரங்கு, பாம்பை எல்லாம் நடிக்க வைத்தவர். மனிதர்களை நடிக்க வைப்பது அவ்வளவு பெரிய விஷயமா? மனுஷன் சும்மா ஷூட்டிங்கில் டக்கு டக்கு என்று எல்லா காட்சிகளையும் எடுப்பார். அப்போதெல்லாம் எங்களுக்கு கேரவன் எல்லாம் கிடையாது. இருந்தாலுமே எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணி நாங்கள் நடித்தோம். அதற்கு ஏற்ப ஆடி வெள்ளி படமும் பெரிய அளவு ஹிட் ஆனது. எனக்கு நிறைய பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது. இப்போது ஆடி வெள்ளி படத்தை ரீமேக் பண்ணும் விஷயம் எனக்கு தெரியாது.
குடும்பம் குறித்து சொன்னது:
யாரும் என்னுடன் தொடர்பில் இல்லை, பேசவும் இல்லை. அதே நேரத்தில் படக்குழுவுக்கு என்னோட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆடி வெள்ளி படம் மாதிரியே இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கணும். நான் எந்த ஒரு சினிமா பேக்ரவுண்ட் இல்லாமல் வந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் 10 பேர். ஒரு குழந்தையை வளர்ப்பது கஷ்டம். 10 குழந்தைகளை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று யோசித்துப் பாருங்கள். நான் நடிக்க வந்த பிறகு தான் என்னோட வருமானத்தில் எல்லாரையும் பார்த்துக் கொண்டேன். அப்பவே என்னுடைய தம்பிகளை எல்லாம் லயோலா கல்லூரியில் நல்லா படிக்க வைத்தேன். அப்பாவோட சேர்ந்து அக்கா எல்லோருக்குமே திருமணம் பண்ணி வைத்தேன். இன்னைக்கு எல்லோருமே வெளிநாடுகளில் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=pQ9Jc-I5x5s
மகள்,கணவர் குறித்து சொன்னது:
என் பொண்ணுக்கு நடிப்பு வரவில்லை. என்னுடைய கணவர் காலேஜ் பிரின்சிபல். அதனாலே என் பொண்ணு நடிக்க வர்றதை விரும்பவில்லை. கல்விக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார். அதே போல் என் பொண்ணும் படிப்பு, வேலை என்று இருந்துவிட்டார். இப்போ அவளோட குடும்பம் வாழ்க்கையும் ரொம்ப நல்லபடியாக போய்க்கொண்டிருக்கின்றது. நான் கத்தோலிக்க கிறிஸ்தவர். ஆனால், எல்லா பக்தி படங்களிலுமே நான் நடித்திருக்கிறேன். திருப்பதி, பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி என்று எல்லா கோயில்களிலும் போயிருக்கிறேன். ஆனால், எனக்கு மூடநம்பிக்கைகள், பேய், பிசாசுகள் மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது. என்னை பொறுத்த வரைக்கும் எல்லா கடவுள்களும் ஒன்று தான். அன்பு தான் நம்மோட வாழ்க்கையில் ரொம்ப முக்கியம் என்று நிறைய பேசியிருந்தார்.