"எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு!" - சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரஹானே உருக்கம்
"எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு!" - சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரஹானே உருக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவம் மிக்க வீரரான அஜிங்க்ய ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சுமார் இரண்டு தசாப்தங்களாக இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்த அவர், உணர்ச்சிப்பூர்வமான பதிவின் மூலம் தனது முடிவை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
"இதுதான் சரியான நேரம்"
ஓய்வு குறித்து பேசிய ரஹானே, வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் இருப்பதாக கூறினார். "வாழ்க்கையின் உண்மை என்னவென்றால், எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் இருக்கிறது. அந்த நேரம் வந்துவிட்டால் அதை மதித்து முன்னேற வேண்டும். பேட்டிங்கில் நான் எப்போதும் டைமிங்கை நம்பியவன். இப்போது ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம் என்று நான் உணர்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா ஜெர்சிதான் கனவு
சிறுவயதில் பயிற்சிக்காக நீண்ட தூரம் பயணித்த நாட்களை நினைவுகூர்ந்த ரஹானே, இந்திய அணிக்காக விளையாடுவதே தனது மிகப்பெரிய கனவாக இருந்ததாக கூறினார். "இந்த விளையாட்டிற்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என் ஒரே கனவாக இருந்தது," என்றார்.
"நாட்டுக்குத்தான் எப்போதும் முதல் இடம்"
தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஒரே கொள்கையை பின்பற்றியதாகவும் ரஹானே தெரிவித்துள்ளார். "என் நாடும், என் அணியும் எப்போதும் என்னைவிட முக்கியம் என்பதே என் கொள்கை. நேர்மையுடன் விளையாடினேன். உங்களின் நோக்கம் சரியாக இருந்தால், இந்த விளையாட்டு உங்களை ஒருபோதும் கைவிடாது என்று நான் நம்பினேன்," என்று அவர் கூறினார்.
இனி அடுத்த தலைமுறைக்காக...
முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான காலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருப்பதை பெருமையாக பார்க்கிறேன் என்று கூறிய ரஹானே, இனி இளம் வீரர்களுக்கு தனது அனுபவத்தை பகிர விரும்புவதாக தெரிவித்தார். "இந்திய கிரிக்கெட்டுக்கான என் அத்தியாயம் முடிந்தாலும், கிரிக்கெட்டுடனான என் பயணம் முடிவடையவில்லை. அடுத்த தலைமுறை வீரர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன். இந்த விளையாட்டு எனக்குக் கற்றுக்கொடுத்த மதிப்புகளை அவர்களுடன் பகிர விரும்புகிறேன்," என்றார்.
"உங்கள் இதயங்களில் நான் தோற்கவில்லை"
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக பேசிய ரஹானே, கிரிக்கெட்டில் பல தோல்விகளை சந்தித்திருந்தாலும், ரசிகர்களின் அன்பில் ஒருபோதும் தோற்கவில்லை என்று கூறினார். "என் பெயருக்கு அர்த்தம் 'தோற்கடிக்க முடியாதவன்'. ஆனால் கிரிக்கெட் எனக்கு பல தோல்விகளை காட்டியது. நானும் தவறு செய்திருக்கிறேன், அணியும் போட்டிகளில் தோற்றிருக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் நான் ஒருபோதும் தோற்கவில்லை. அது உங்கள் இதயங்களில். உங்கள் அன்புக்கும், நம்பிக்கைக்கும், ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. இந்திய வீரர் எண் 278... விடைபெறுகிறேன்," என்று உணர்ச்சியுடன் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை ரஹானே நிறைவு செய்தார்.