நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா? நற்பணி மன்றம் கொடுத்த அதிகாரப்பூர்வ விளக்கம்
நற்பணி மன்றம் கொடுத்த அதிகாரப்பூர்வ விளக்கம்
அகில இந்தியா சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் உடைய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி இருந்தர்கள். அந்த கூட்டத்தில் நிர்வாகி வீரமணி என்பவர், காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறி இருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அரசியலுக்கு வருவதால் தான் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கருத்துக்கள் பகிரப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்திருக்கிறது. அதில் அவர்கள், "28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட திரு.இரா.வீரமணி அவர்கள், `இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
சூர்யா அரசியல் சர்ச்சை:
அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ. பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக திரு. இரா.வீரமணி அவர்கள் மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல், திரு.சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை.
சூர்யா நற்பணி அறிக்கை:
அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது. மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் திரு.R.A. ராஜ் மற்றும் அமைப்பாளர் திரு.G.ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும். எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறி இருக்கிறார்கள்.
சூர்யா குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருந்தார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். பல பிரச்சினைகளைத் தாண்டி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது.