அமரன் பட நடிகர் லல்லுவிற்கு டும் டும் டும், வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 7/6/2025

அமரன் பட நடிகருக்கு திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்பட்ட படங்களில் அமரன் ஒன்று. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து இருக்கிறது.

அமரன் படம்:

மேலும், இந்த படத்தில் ஆர்மி மேனாக ரவிசங்கர் என்ற கதாபாத்திரத்தில் லல்லு என்பவர் நடித்திருப்பார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் முகுந்த் வரதராஜன், ரவிசங்கரிடம் சொல்லி இருக்கும் விஷயம் பலரையுமே கண்கலங்க வைத்தது. இந்த படத்தில் லல்லு நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவோடு தான் லல்லு சென்னைக்கு வந்தார். நிறைய கம்பெனிகள் ஏறி இறங்கியிருந்தார்.

நடிகர் லல்லு சினிமா வாய்ப்பு:

இவர் குறும்படங்கள் எல்லாம் நடித்து வந்தார். இவருடைய குறும்படத்தை பார்த்து தான் ராஜ்குமார் பெரியசாமி, தன்னுடைய ரங்கூன் படத்தில் நடிக்க கூப்பிட்டார். அதற்கு பிறகு தான் அமரன் படத்தில் மீண்டும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அமரன் படத்திற்கு முன்பு இவர் கார்த்திக் நடிப்பில் வெளியாகியிருந்த கைதி, விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த மாஸ்டர் படங்களில் எல்லாம் நடித்திருந்தார்.

நடிகர் லல்லு அனுபவித்த கஷ்டங்கள்:

இருந்தாலும் இவரை உலகம் முழுவதும் கொண்டாட வைத்தது அமரன் படம் தான். இந்த படத்திற்காக லோன் போட்டு இருந்தாராம் லல்லு. காரணம், அந்த அளவிற்கு வருமானம், வாய்ப்பு இல்லாமல் லல்லு கஷ்டப்பட்டாராம். இதை இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார். அமரன் படத்திற்கு பிறகு இவர் படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் லல்லு திருமணம்:

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் லல்லுவிற்கு திருமணமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் காயத்ரி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full