மருத்துவ வேலையை விட்டு இந்தியா வர காரணம் இது தான் - மனம் திறந்த அனிதா விஜயகுமார்

By subhashini · 6/3/2025

மருத்துவ தொழிலை விட்டதற்கான காரணம் பற்றி அனிதா விஜயகுமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்த விஜயகுமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

அதேபோல் விஜயகுமாரின் மகன், மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். மேலும், விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார்- முத்துக்கனுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா, கவிதா. மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. அருண் விஜய்யின் அக்கா அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் ஒரு மருத்துவர் ஆவார். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

அனிதா விஜயகுமார் குறித்த தகவல்:

திருமணம் ஆனவுடன் இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் செட்டில் ஆகி இருந்தார். மேலும், கடந்த ஆண்டு தான் இவருடைய மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இவருடைய இரண்டு பிள்ளைகளுமே மருத்துவ படிப்பை முடித்து லண்டனில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அனிதாவிற்கு சிறு வயதிலிருந்தே எமர்ஜென்சியில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் 15 வருடங்கள் இவர் எமர்ஜென்சியில் பணியாற்றி இருந்தார். சமீபத்தில் தான் இவர் மருத்துவத்துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அனிதா குடும்பம்:

லட்சத்தில் சம்பாதித்தும் தற்போது அந்த வேலையை உதறிவிட்டு சென்னையில் வந்து செட்டில் ஆகி இருக்கிறார். இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து அனிதா விஜயகுமார், எனக்கு சின்ன வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. என்னுடைய விருப்பத்தை அறிந்த என்னுடைய பெற்றோர்களும் மருத்துவம் படிக்க வைத்தார். என்னை அவர்கள் நடிக்க சொல்லவே இல்லை. வீட்டில் யார் என்ன ஆசைப்படுகிறோமோ, அதை தான் என்னுடைய பெற்றோர்கள் செய்தார்கள். நான் மக்களுக்காக பணியாற்ற வேண்டும், அவர்கள் கஷ்டப்படும் போது ஆறுதல் சொல்ல வேண்டும் என்றுதான் நான் சின்ன வயதில் இருந்தே விரும்பினேன்.

அனிதா விஜயகுமார் பேட்டி:

எனக்கான தேவைகள் எல்லாவற்றையுமே அவர்களை செய்து தந்தார்கள். அதனால் தான் என்னால் படிக்க முடிந்தது. அதே போல் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அவசர சிகிச்சை பிரிவில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் ஆசை, கனவு. மக்களோடு பழக வேண்டும், அவர்களுடைய கஷ்டத்தில் உதவ வேண்டும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன். நான் படித்து முடித்து ஆரம்பத்தில் 20 வருடங்கள் புரபஸராக வேலை பார்த்தேன். அதற்கு பிறகு தான் 15 வருடங்கள் எமர்ஜென்சியில் வேலை பார்த்தேன்.

மருத்துவ தொழில் விட்ட காரணம்:

பலரும் தங்களுடைய உயிர் போகும் நிலையில் சேர்த்து வைத்த சொத்தையோ, நகையோ பார்க்க வேண்டும். என்று ஆசைப்படுவது இல்லை. குடும்பத்தை பார்க்க வேண்டும், அம்மா, அப்பா, மகன், குழந்தைகள் மனைவியை பார்க்க வேண்டும் என்று தான் என்னுடைய கையைப் பிடித்து அழுது கொண்டே கேட்பார்கள். எப்போதுமே பணத்தைவிட உறவுகள் தான் முக்கியம். இப்போது என் வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை நான் சேர்த்து வைத்துக்கொண்டு குடும்பத்தோடு நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் என்னுடைய வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். எல்லோராலும் அப்படி இருக்க முடியாது என்பது தெரியும். கூடுமானவரை உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full