தமிழ் நினைவுச்சின்னத்தை உருவாக்க காரணம் இது தான் - இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்த தகவல்
தமிழ் மொழி தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மொழிக்காக ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் ஏ.ஆர் ரகுமான். இந்நிலையில் இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
அதில் அவர், “தமிழ்” உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
ஏ ஆர் ரகுமான் பதிவு:
இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது. ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது.
தமிழ் பற்றி சொன்னது:
எதிர்காலத்தில் பெருமைச்சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம். இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம் என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
ரகுமான் குறித்த தகவல்:
கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் கால்தடம் பதித்தார்.
ரகுமான் திரைப்பயணம்:
தமிழில் இவர் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.