ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா- நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திரைப்பட இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா சிக்கி இருக்கும் தகவல் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் ஆர்ம்ஸ்டராங் மரணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார்.
இவரை வீட்டுக்கு அருகில் வெட்டி கொலை செய்தார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை:
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல ரவுடி சம்போ செந்திலுடன் வழக்கறிஞர்கள் ஹரிஹரன், சிவா, கிருஷ்ணன் ஆகியோர் நெருக்கமாக இருந்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஹரிஹரனை கைது செய்ய செய்த பின்பு, சமீபத்தில் தான் வழக்கறிஞர் சிவாவை, சென்னையில் காரில் வரும்போது கைது செய்தனர். அப்போது சிவாவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியேறி உள்ளது.
சிக்கிய வழக்கறிஞர்கள்:
அதாவது வழக்கறிஞர் ஹரிஹரனை கைது செய்த பின்பு, வழக்கறிஞர்கள் கிருஷ்ணன் மற்றும் சிவா ஆகியோர் சென்னையில் இருந்து திருச்செந்தூர் வரை காரில் சென்றுள்ளனர். அதன் பிறகு அவர்கள் காரிலேயே மதுரை சென்று தலைமறைவாகியுள்ளனர். அதற்குப் பிறகு கிருஷ்ணன், தனக்கு ஒரு வேலை இருப்பதாக தனது காரை சிவாவிடம் கொடுத்து சென்னையில் உள்ள வீட்டில் விடும்படி கூறியுள்ளார். அப்போது தான் சென்னைக்கு வரும் வழியில் வசமாக சிவா போலீசாரிடம் சிக்கி உள்ளார்.
வழக்கறிஞர் கிருஷ்ணன் தப்பி ஓட்டம்:
தற்போது, வழக்கறிஞர் கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் தாய்லாந்து தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் கிருஷ்ணரிடம் தொலைபேசி மூலம் பேசியவர்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சமீப காலமாக மோனிஷா அடிக்கடி கிருஷ்ணனுடன் தொலைபேசியில் பேசி இருக்கும் நிலையில், அவர்தான் கிருஷ்ணனுக்கு வெளிநாடு செல்ல உதவினாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
மோனிஷா விளக்கம்:
ஆனால், வழக்கறிஞர் கிருஷ்ணனுக்கு எந்த ஒரு அடைக்கலம் கொடுக்கவில்லை என்றும், அவர் வழக்கறிஞர் என்பதால் ஒரு வழக்கு தொடர்பாகவே செல்போனில் பேசியதாகவும் மோனிஷா தெரிவித்துள்ளார். மோனிஷாவிடம் விசாரணை நடத்தி விட்டு அவரை அனுப்பிய நிலையில், அடுத்த கட்டமாக இயக்குனர் நெல்சனிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் மற்றும் அவரது மனைவி சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.