எல்லா துறைகளிலும் அழுத்தம் இருக்கதான் செய்கிறது, ஆனால் - நடிகர் அருண் விஜய் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தார். இருந்தாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 23 ஆண்டுகளுக்கு மேல் அருண் விஜய் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.
பின் இவர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி தந்தது. அதற்குப் பிறகு இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், ஹீரோவாகவும் மிரட்டி கொண்டு வருகிறார். அந்த வகையில் அருண் விஜய் அவர்கள் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. கடைசியாக அருண் விஜய் அவர்கள் தனுஷ் இயக்கி நடித்திருந்த இட்லி கடை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அருண் விஜய் குறித்த தகவல்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ரெட்டை தல. இந்த படம் இன்னும் இரண்டு நாள்களில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று அருண் விஜய் மற்றும் சித்தி இதானி இருவரும் சேலம் மாவட்டம் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.
அருண் விஜய் பேட்டி:
இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய், நான் நடித்திருக்கும் ரெட்டை தல படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக இருக்கிறது. அதற்காகத்தான் இந்த வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். நல்ல திரைப்படங்களை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் அதிக அளவில் இருக்கிறது. இதனால் தான் திரையரங்கிற்கு கொண்டு வரக்கூடிய அளவிற்கு நல்ல படங்களை எடுக்கும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=ofXbn9bCXNE
விஜய் அரசியல் பற்றி சொன்னது:
புதிய படங்கள் ஓடிடியில் எவ்வளவு நாட்களுக்கு பிறகு வெளியாக வேண்டும் என்ற முடிவை தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே செய்தியாளர் ஒருவர், விஜயின் அரசியல் பயணம் குறித்து கேட்டிருக்கிறார். அதற்கு அருண் விஜய், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அரசியல் மட்டும் இல்லாத அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்க தான் செய்கிறது என்று கூறியிருக்கிறார்.