'ரோஜா' படத்திற்கு பிறகு நான் வெளிநாட்டிற்கு போயிட்டேன், காரணம் - அரவிந்த்சாமி ஓபன் டாக்
விருது விழாவில் ரோஜா படம் பற்றி நடிகர் அரவிந்த்சாமி பகிர்ந்து இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 2025 ஆம் ஆண்டுக்கான IFFM-ன் (Indian Film Festival of Melbourne) விருது விழா நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் நடிகர் அரவிந்த்சாமிக்கு 'Leadership in Cinema' என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை வாங்கிய பிறகு நடிகர் அரவிந்த்சாமி அவர்கள் தன்னுடைய திரை பயணம் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், ரோஜா படம் வெளிவந்த போது
நான் இந்தியாவிலேயே இல்லை. நான் அப்போது வெளிநாட்டில் இருந்தேன். என்னுடைய முதுகலை படிப்பிற்காக தான் நான் வெளிநாட்டுக்கு சென்றிருந்தேன். ரோஜா படத்தை முடித்த பிறகு நான் என்னுடைய படிப்பை தொடர வேண்டும் என்று வெளிநாட்டிற்கு கிளம்பி விட்டேன்.
IFFM விருது விழா:
அந்த படத்தினுடைய வெற்றியை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், ரோஜா படத்தினுடைய காட்சிகளை பார்க்கும்போது என்னுடைய நினைவுகளை அது தூண்டுகிறது. நான் அர்த்தமுள்ளதாக முக்கியமானதாக இருக்கும் படங்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். நான் வணிகத்தை சார்ந்து எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க விரும்பவில்லை.
அரவிந்த்சாமி பேசியது:
யாராவது என்னிடம் ஒரு சவால் விடுத்தால் நான் அதை என் விருப்பப்படி செய்து முடிக்க முடியுமா என்று யோசிப்பேன். அந்த சந்தேகம் எனக்கு வர வேண்டும். அதுதான் என்னை உத்வேகம் அளித்து வேலை செய்ய தூண்டுகிறது. ஒரு விஷயம் எளிதாக இருந்தால் நான் அதை செய்ய விரும்ப மாட்டேன். எந்த ஒரு செயலாக இருந்தாலும் என்னுடைய விருப்பத்தின் படி தான் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.
அரவிந்த்சாமி குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அரவிந்த்சாமி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தொழிலதிபரும் ஆவார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மணிரத்தினத்தின் ரோஜா படம் தான். இந்த படம் நாடெங்கிலும் பிரபலமாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
அரவிந்த்சாமி திரைப்பயணம்:
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பின் இவர் 2000 ஆண்டு முதல் நடிப்பை விட்டு தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் நடுவில் அரவிந்த்சாமி சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு கடல் என்ற படத்தின் மூலம் இவர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த மெய்யழகன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.