"வைபவை உட்கார வைக்கலாம் என்றது அவமதிப்புக்காக அல்ல... அவர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!" - அஸ்வின் விளக்கம்
"வைபவை உட்கார வைக்கலாம் என்றது அவமதிப்புக்காக அல்ல... அவர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!" - அஸ்வின் விளக்கம்
வைபவ் குறித்து அஸ்வின் மீண்டும் பேச்சு
இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் முன்பு தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, வைபவ் சில நேரங்களில் வெளியே அமர்ந்து போட்டியை கவனிக்கலாம், மற்றவர்களுக்கு உதவலாம் என்று அஸ்வின் கூறியிருந்தார். அந்த கருத்து அவமதிக்கும் நோக்கத்தில் கூறப்படவில்லை என்பதை தற்போது அஸ்வின் தெளிவுபடுத்தியுள்ளார்.
"அது அவமதிக்கும் வகையில் சொல்லப்படவில்லை"
தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "வைபவ் சூர்யவன்ஷி வெளியே அமரலாம், ஒருவருக்கு தண்ணீர் கொடுக்கலாம், போட்டியை கவனிக்கலாம் என்று நான் முன்பு கூறியிருந்தேன். அது எந்த விதத்திலும் அவமதிக்கும் வகையில் சொல்லப்பட்ட கருத்து அல்ல. அவர் இப்போது கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதைத்தான் நான் கூறினேன்," என்றார். மேலும், சில போட்டிகளில் வெளியே இருந்து வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கவனிப்பது வைபவின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அஸ்வின் குறிப்பிட்டார்.
"அவரை நீக்குவது பற்றி பேச வேண்டாம்"
வைபவை அணியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும் என்ற விவாதத்தை விட, அவருக்கு தேவையான நேரத்தையும் சூழலையும் வழங்க வேண்டும் என்பதே தனது கருத்து என அஸ்வின் கூறினார். "அவரை நீக்கலாமா, தேர்வு செய்யலாமா என்று இப்போதே பேச வேண்டாம். அவரை அப்படியே இருக்க விடுங்கள். அவர் வளரட்டும். வெளியே அமர்ந்து மற்ற வீரர்களை கவனித்தாலும், அது அவருக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கும். அந்த அனுபவங்கள் அவரை இன்னும் சிறந்த வீரராக மாற்றும்," என்றார்.
"ரிக்கி பாண்டிங்கும் ஷார்ட் பந்தில் அவுட்டாகியிருக்கிறார்"
வைபவின் பலவீனமாக கூறப்படும் ஷார்ட் பால் குறித்து பேசிய அஸ்வின், உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களுக்குக்கூட பலவீனங்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார். "ஷார்ட் பந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன் யார்? ரிக்கி பாண்டிங். அவர்கூட ஷார்ட் பந்தில் அவுட்டாகியிருக்கிறார். ஒவ்வொரு வீரருக்கும் பலம், பலவீனம் இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் இதெல்லாம் இயல்பான விஷயங்கள்," என்று கூறினார். ஒரு வீரர் தனது பலத்தை சரியாக பயன்படுத்துவதோடு, தனது பலவீனங்களை மறைத்து, அதே நேரத்தில் பயிற்சியில் அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் அஸ்வின் தெரிவித்தார்.
ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிரான அனுபவம் முக்கியம்
இங்கிலாந்தில் ஜோஃப்ரா ஆர்ச்சரை எதிர்கொண்ட அனுபவமும் வைபவுக்கு குறைவாகவே இருப்பதாக அஸ்வின் கூறினார். "ட்ரென்ட் பிரிட்ஜில் வைபவ் ஜோஃப்ரா ஆர்ச்சரை எத்தனை முறை எதிர்கொண்டிருக்கிறார்? இவை அனைத்தும் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் பாடங்கள். ஒருசில போட்டிகளில் ஏற்பட்ட பிரச்சினைகளை வைத்து ஒரு வீரரின் எதிர்காலத்தை முடிவு செய்துவிட முடியாது," என்றார்.
"வைபவ் மீது எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது"
வைபவ் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் அவர் மீது எதிர்பார்ப்பு திடீரென உச்சத்திற்கு சென்றுவிட்டதாக அஸ்வின் கூறினார். "அவர் மிகவும் இளம் வீரர். ஆனால் ஐபிஎல்லில் அவர் சிறப்பாக விளையாடியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துவிட்டது. ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா போல ரன்கள் குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அது எப்படி சாத்தியமாகும்?" என்று கேள்வி எழுப்பினார்.
கிரிக்கெட்டில் ஏற்றத் தாழ்வுகள் இயல்பானவை என்றும், வைபவுக்கும் அதே பயணம் இருக்கும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்."வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பது போல கிரிக்கெட்டிலும் இருக்கும். வைபவுக்கு அந்த அனுபவங்களை கடந்து வளர தேவையான நேரத்தை கொடுக்க வேண்டும். அவரை அவசரப்பட்டு எடை போடாமல், அவர் வளர்வதை நாம் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் அவர் ஒரு மிகச்சிறந்த வீரராக உருவாகும் திறமை அவரிடம் இருக்கிறது," என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.