'விமர்சியுங்கள்... ஆனால் அவமதிக்காதீர்கள்!' - ரவி பிஷ்னோவுக்கு ஆதரவாக களமிறங்கிய அஸ்வின்; சமூக வலைதள ட்ரோலிங்கை சாடிய முன்னாள் இந்திய நட்சத்திரம்

'விமர்சியுங்கள்... ஆனால் அவமதிக்காதீர்கள்!' - ரவி பிஷ்னோவுக்கு ஆதரவாக களமிறங்கிய அஸ்வின்; சமூக வலைதள ட்ரோலிங்கை சாடிய முன்னாள் இந்திய நட்சத்திரம்

By S.Dhilip Kumar · 7/7/2026

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும் ட்ரோலிங்கிற்கும் ஆளாகியுள்ளார். குறிப்பாக முக்கியமான கட்டத்தில் அவர் வீசிய நோ-பால்கள் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பிஷ்னோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.

'விமர்சனத்துக்கும் அவமதிப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது'

தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், இந்திய அணிக்காக விளையாடும் ஒரு வீரரை அவமதிப்பது மிகவும் தவறான செயல் என்று கூறினார். "இது மிகவும் மரியாதைக்குறைவானது. 160 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாட்டில், ஒருவருக்கு மட்டுமே இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வீரர் ஏற்கனவே ஒரு சாதனையாளர். இந்தியாவுக்காக விளையாடுவது இவ்வளவு எளிதான விஷயமா? வீரர்களை விமர்சியுங்கள், அதில் தவறில்லை. ஆனால் விமர்சனத்துக்கும் அவமதிப்புக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது," என்று அஸ்வின் தெரிவித்தார்.

'சமூக வலைதள ட்ரோலிங் எல்லை மீறுகிறது'

சிலர் சமூக வலைதளங்களில் வீரர்களை கேலி செய்யும் விதம் மிகவும் கவலைக்குரியது என்றும் அஸ்வின் சுட்டிக்காட்டினார். "இன்றுகூட ஒரு வீடியோ பார்த்தேன். அதில் ஒருவர் ஒரு இந்திய வீரரை சைகைகள் மூலம் கேலி செய்திருந்தார். இது நல்ல விஷயம் அல்ல. இப்படிப்பட்ட செயல்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரோல் செய்யப்படுவதை வீரர்கள் எப்படி சமாளிப்பார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

'ரவி பிஷ்னோ நல்ல பந்துவீச்சாளர்'

ஒரு போட்டியில் ஏற்பட்ட தவறுக்காக ரவி பிஷ்னோவை முழுமையாக நிராகரிக்கக் கூடாது என்றும் அஸ்வின் வலியுறுத்தினார். "ரவி பிஷ்னோ ஒரு திறமையான பந்துவீச்சாளர். அவருடைய ஆட்டத்தில் சில குறைகள் இருக்கலாம். அவற்றை பற்றி நாமும் ஏற்கனவே பேசியிருக்கிறோம். அவர் முன்னேற்றம் அடைய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்காக அவரை அவமதிப்பது சரியல்ல," என்றார்.

'நோ-பால் விதியையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'

ரவி பிஷ்னோ விவகாரத்தைத் தொடர்ந்து, டி20 கிரிக்கெட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 'சைடு-லைன் நோ-பால்' விதியையும் அஸ்வின் கேள்விக்குட்படுத்தினார். "இந்த விதியை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது மிகவும் பழைய விதி. டி20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களின் பார்வையில் யாராவது யோசித்திருக்கிறார்களா? சிறிய எல்லைக்கோடுகள், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் இல்லாத ஆடுகளங்கள், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழ்நிலை என்று எல்லாமே பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது. இப்படியிருக்கும்போது பந்துவீச்சாளர்கள் எப்படி தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?" என்று அவர் ஆதங்கம் தெரிவித்தார்.

'வீரர்களுக்கு ஆதரவு தேவை... அவமானம் அல்ல'

ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததற்காக ஒரு வீரரை குறிவைத்து தாக்குவது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமான கலாச்சாரம் அல்ல என்று அஸ்வின் கூறியுள்ளார். தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே அவரது கருத்து. ரவி பிஷ்னோவின் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை என்பதை ஏற்றுக்கொண்ட அஸ்வின், அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் நடைபெறும் அவமதிப்பு மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full