அதர்வா-கார்த்திக் நரேன் கூட்டணி கைக்கொடுத்ததா - 'நிறங்கள் மூன்று' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 22/11/2024

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அதர்வா திகழ்ந்து கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நிறங்கள் மூன்று. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அதர்வாவுடன் சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் நாயகன் அதர்வா போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இருந்தாலுமே இவருக்கு இயக்குனராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதனால் இவர் போராடி ஒரு கதையை எழுதுகிறார். பின் இவர் தன்னுடைய முதல் படத்தை எடுப்பதற்காக ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக ஏறிக் கொண்டிருக்கிறார். ஆனால், அங்கு அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது. இன்னொரு பக்கம் பள்ளி ஆசிரியராக ரகுமான் இருக்கிறார். இவருடைய மகள் அம்மு அபிராமி.

காவல்துறை அதிகாரியாக சரத்குமார் வருகிறார். இதற்கிடையில் அதர்வா எழுதிய கதையில் பைலட் படம் எடுக்கும் போது ஒரு பெண்ணை கடத்துவது போல காட்சி இருக்கிறது. அதை அதர்வா எடுக்கிறார். அதைப் பள்ளி மாணவன் பார்த்து விடுகிறார். அதே நேரத்தில் தான் அவருடைய தோழியான அம்மு அபிராமியும் தொலைந்து போகிறார். இதனால் அதர்வா தான் தன்னுடைய தோழியை கடத்தினார் என்று அதர்வாவை அந்த பள்ளி மாணவன் துரத்துகிறார்.

இன்னொரு பக்கம் அதர்வாவின் கதையை ஒரு முன்னணி இயக்குனர் திருடி படமாக எடுக்கிறார். பின் அதர்வா ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்த விஷயம் போலீஸ் அதிகாரியான சரத்குமாருக்கு தெரிய வருகிறது. இறுதியில் அம்மு அபிராமியை கடத்தியது யார்? அதர்வா இயக்குனர் ஆனாரா? தன் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு அதர்வாவை திரையில் பார்க்க முடிகிறது. ஒரு வாய்ப்பு தேடும் இளைஞராக அவர் நடித்திருக்கும் காட்சிகள் நன்றாக இருக்கிறது.

படம் முழுவதுமே அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானது போல காண்பித்திருக்கிறார்கள். அதுதான் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. பள்ளி மாணவனாக துஷ்யந்த் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தினுடைய முதல் பாகம் ஒரே இடத்தை தான் சுத்திக் கொண்டிருக்கிறது. இருந்தாலுமே, விறுவிறுப்பாக இயக்குனர் காண்பித்து இருக்கிறார். இரண்டாம் பாகம் எதை நோக்கி செல்கிறதே தெரியவில்லை. சரத்குமார் ,ரகுமான் கதாபாத்திரங்கள் எல்லாம் என்ன? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.

அதோடு ரகுமான்- அதர்வா- சரத்குமார் ஆகிய மூன்று பேரையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு செல்ல இயக்குனர் முயற்சி செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று தான். படத்திற்கு பக்க பலமே பின்னணி இசை, ஒளிப்பதிவும் தான். ஆனால், சண்டைக் காட்சிகள் தான் சோதிக்க வைத்து இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி நன்றாக தான் இருக்கிறது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை காண்பித்து இருக்கலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கிறது

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கதைக்களம் நன்றாக இருக்கிறது

பின்னணி இசை, ஒளிப்பதிவு சிறப்பு

குறை:

இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம்

முதல் பாதியில் போடப்பட்ட ட்விஸ்டுகளுக்கு இரண்டாம் பாதியில் கொடுத்திருக்கும் விளக்கம் நன்றாக இருந்திருக்கலாம்

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

சண்டைக் காட்சிகள் பெரிதாக கவரவில்லை

சரத்குமாரின் கதாபாத்திரத்தில் கவனம்

மொத்தத்தில் நிறங்கள் மூன்று- சாயம் குறைவு

Tamil Behind Talkies AMP · Quick view
View full