ஒரு வழியாக முடிவு செய்யப்பட்ட 'பிக் பாஸ் 8' தொகுப்பாளர், கமல் இடத்தை பிடித்தது யார் தெரியுமா?
'பிக் பாஸ் 8' நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல் விலகிய நிலையில், அடுத்த தொகுப்பாளர் யார் என்கிற தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகுதான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன் களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக நின்று இருக்கிறது. பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.
கமல் விலகல்:
இந்நிலையில் கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா கமிட்மெண்ட்ஸ் காரணமாக இந்த சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியாது என்று தெரிவித்து இருந்தார்.
தொகுப்பாளர் யார் - சிம்பு:
தற்போது கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், அடுத்தது யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி தான் சோசியல் மீடியாவில் எழுந்து வந்தது. கமலுக்கு பதிலாக இதுவரை இரண்டு நபர்கள் மட்டுமே தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சிம்பு. இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஒரு சில வாரங்கள் தொகுத்து வழங்கினார். சிம்பு தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும், அவர் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நோ சொல்லிவிட்டாராம்.
ரம்யா கிருஷ்ணன்:
அதேபோல், நடிகர் கமல்ஹாசன்க்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த சீசனில் ஒரு வாரம் மட்டும் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக கலந்து கொண்டார். அவர் ஒரே ஒரு எபிசோடு மட்டும்தான் தொகுத்து வழங்கினார். ஆனால், அந்த எபிசோடுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்காததால் அவரை இந்த சீசனுக்கு அழைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதி:
மேலும், சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணனை தவிர்த்து யார் என்று பார்த்தால், நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் 8 தொகுத்து வழங்குவார் என நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. விஜய் சேதுபதி அல்லது நயன்தாரா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட் ஆகியுள்ளாராம். அவரை வைத்து விரைவில் ப்ரோமோ சூட்டும் நடைபெற இருக்கிறதாம். எனவே, வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.