இதனால தான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தேன்-கானா ஜெஃப்ரி சொன்ன சுவாரசியம்- யார் இந்த ஜெஃப்ரி ?
பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர் ஜெஃப்ரி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த முறை போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றைக் கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபிக் கிடைக்கும் என விஜய் சேதுபதி அனைவரையும் வாழ்த்தி உள்ளே அனுப்பினார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் சீசன் 8:
இதனால் எல்லோருமே குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார்கள். கடைசியில் ஆண்கள், பெண்கள் கேட்ட பக்கம் விட்டுக் கொடுத்தார்கள். இருந்தாலும், ஒரு வாரம் எந்த ஆண்களையும் எலிமினேஷன் செய்யக்கூடாது என்று கண்டிசன் போட, பெண்கள் அணி ஏற்று கொண்டார்கள். இப்படி முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தது. இது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இதை கேட்டு போட்டியாளர்கள், ஒரு நாளில் எப்படி போட்டியாளர்களை பற்றி தெரிந்து எவிக்ஷன் செய்ய முடியும் என்று விவாதம் செய்து இருந்தார்கள். பின் ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்திருந்தார்கள். அந்த வகையில் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிட்சயமான மற்றும் பரீட்சயம் இல்லாத நபர்கள் கலந்து இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயம் இல்லாத நபர்களில் ஒருவராக ஜெஃப்ரி இருக்கிறார்.
ஜெஃப்ரி குறித்த தகவல்:
இவர் கானா சிங்கர். இந்நிலையில் இவரைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம். இவருக்கு சின்ன வயதிலிருந்து கானா பாடல் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். இவர் லாஜிஸ்டிக்ஸில் வேலை பார்த்திருக்கிறார். அங்கு வேலை பார்த்துக்கொண்டே இவர் கானா பாடல்களை பாடி இருக்கிறார். பின் இவருடைய அம்மாவின் ஊக்கத்தினால் ஜெஃப்ரி அதையே தொழிலாக மாற்றிக்கொண்டார். இவருக்கு கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்பிரேஷன் ஆவார். இதனால் இவரும் கால்பந்து விளையாடுவதில் திறமை வாய்ந்தவராக இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்கு வர காரணம்:
இவர் கானா பாடலின் மூலம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நுழைந்திருக்கிறார். இது தொடர்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவர் அளித்த பேட்டியில், முதலில் மெலோடி பாடல்களை பாடி தான் என்னுடைய இசை பயணத்தை தொடங்கினேன். நான் பாடும்போது தவறுகளை திருத்தி சொல்வதெல்லாம் என்னுடைய அம்மாதான் செய்வார். முதலில் நான் சின்ன சின்னதாக நண்பர்களுடன் சேர்ந்து கானா பாடல்களை பாடினேன். ஒரு கட்டத்தில் எனக்கு அதிலேயே அதிக ஆர்வம் வந்தது. இப்போது முழுமையாக கானா பாடலை பாடுவதில் இறங்கி விட்டேன். எல்லோருக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு ஒவ்வொரு காரணம் இருக்கும். எனக்கு ஒரே காரணம் தான், என்னுடைய வீட்டின் வறுமையின் நிலைமையை மாற்ற வேண்டும் என்பது தான் என்று பேசி இருந்தார்.