இதே இடத்துல தான் 10 வருசத்துக்கு முன்னாடி என் மகன் உயிர் தப்பினான் - பிக் பாஸ் ராணவ் தந்தை சொன்னது
விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 74 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் புது டாக்ஸ்கை கொடுத்திருந்தார். இந்த டாஸ்கில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட சவுந்தர்யா, அவன் நடிக்கிறான், டிராமா போடுகிறான் என்றெல்லாம் பேசி இருந்தார். அதற்குப்பின் ராணவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார்.
இதனால் போட்டியாளர்கள் வருத்தப்பட்டு ராணவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்கள். இப்படி கலவரத்துடன் நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ராணவின் தந்தை சந்துரு அளித்த பேட்டியில், எங்களுடைய முன்னோர்கள் பர்மாவில் இருந்தவர்கள். அங்கிருந்து தான் எங்களுடைய மக்கள் அகதிகளாக இங்கு வந்தார்கள். என்னுடைய அப்பா சாக்கு வியாபாரத்துக்காக குடும்பத்தோடு சென்னைக்கு அழைத்து வந்தார். அவர் கடுமையான உழைப்பாளி. சென்னைக்கு வந்த பிறகு தான் ஓரளவு பொருளாதார வசதி எங்கள் குடும்பத்திற்கு வந்தது. எனக்கு ஆரம்பத்தில் அரசியலில் ஆர்வம் இருந்ததால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். பின் வடசென்னை மாவட்ட செயலாளராக சில காலம் பணியாற்றியிருந்தேன்.
ராணவ் குறித்து சொன்னது:
எனக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. மூத்த மகன் தான் ராணவ். அவன் சட்டம் படிக்க வைத்தேன். ஆனால், அவனுக்கு அதில் விருப்பமே இல்லை. சினிமா மீது தான் அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதனால் அவன் போக்கிலேயே விட்டுவிட்டேன். அவன் கடுமையாக முயற்சி செய்து சின்ன சின்ன கதாபாத்திரங்களும் நடித்துக் கொண்டிருந்தான். அவன் முதன் முதலாக ஹீரோவாக நடித்திருக்கிற படம் இன்னும் ரெண்டு மாசத்துல வெளியாகயிருக்கிறது. ஆனந்த தாண்டவம், செல்லமே போன்ற படங்களெல்லாம் இயக்கிய காந்தி கிருஷ்ணா தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த சூழலில் தான் இவருக்கு பிக் பாஸில் போற வாய்ப்பு கேட்டது.
ராணவ் தந்தை பேட்டி:
பிக்பாஸ் வீட்டிற்கு போன பிறகு நாங்க எல்லோருமே ஆர்வமாக பிக் பாஸ் பார்க்கலாம்னு நினைத்து தான் தப்பா போனது. அந்த வீட்டுக்குள் சில போட்டியாளர்கள் மூலமாக அவன் படுற கஷ்டங்களை பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. சிலர் வன்மத்தை எல்லாம் கக்குறாங்க. சில நாள் நிகழ்ச்சியை பார்த்து என்னுடைய மனைவி அழுது கொண்டே டிவி ஆப் பண்ணி விடுவார். வார இறுதியில் அதைவிட மோசமாக இருக்கும். பேச வரும்போதே விஜய் சேதுபதி, நீ உட்காருன்னு சொல்லிடுவாரு. அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று எங்களுக்கு புரியவில்லை. குடும்பப் பின்னணி அது இதுன்னு சொல்லி சில போட்டியாளர்களிடம் ரொம்ப அக்கறையாக நடந்து கொள்கிறார்.
விஜய் சேதுபதி குறித்து சொன்னது:
எல்லா போட்டியாளர்களையும் சமமாக நடத்த வேண்டியது தான் அவருடைய வேலை. ஆனால், அவர் அப்படி நடந்துக்கவில்லை. ஒரு தொகுப்பாளராக விஜய் சேதுபதி தன்னுடைய வேலையை சரியாக செய்திருந்தால் இப்போது என் மகனுக்கு கையில் அடிபட்டு இருக்காதுன்னு தான் சொல்லுவேன். ஜெஃப்ரியை அவர் சரியான நேரத்தில் கண்டிக்காமல் விட்டது தான் இந்த விபத்துக்கு காரணம். அடிபட்ட அன்னைக்கு போன் பண்ணி சொன்னார்கள். தகவலை கூட விவரமா சொல்லவில்லை. அதனால் என்னுடைய குடும்பம் டாக்டரை பேச வைத்து விஷயத்தை கேட்டுக்கொண்டேன். அவரே பேசிய பிறகு தான் அவர் அம்மாவுக்கு நிம்மதியானது. இருந்தாலும், இப்ப வரைக்கும் எங்க வீட்டில் எல்லோருக்கும் சரியா தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்.
ராணவ் சிறு வயது சம்பவம்:
காரணம், பிக் பாஸ் செட் இருக்கிற அந்த இடத்தில் முன்னாடியே தீம் பார்க் இருந்தது. அப்போது என் குடும்பத்துடன் நாங்கள் போயிருந்தோம். இது பத்து வருடங்களுக்கு முன்னாடி நடந்தது. ராணவ் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தான். அங்கு விளையாடும் போது அவனுக்கு அடிபட்டு உயிர் தப்பினான். உடனே தீம் பார்க்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என்று புகார் கொடுத்தோம். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. என் மகன் பிக் பாஸ் போகும் போது எனக்கு இந்த பழைய ஞாபகம் தான் வந்தது. இருந்தாலும் அவன் எப்பவுமே பாசிட்டிவான எண்ணங்கள் உடையவன். அதனால் நம்பிக்கையோடு அனுப்பி வைத்தேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.