இந்த சார்பட்டா நடிகர் என்னுடைய மாணவர் தான் - ஆரி சொன்ன செம சர்ப்ரைஸ் தகவல்.
சார்பட்டா படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரயும் கவர்ந்த நடிகர் தன்னுடைய மாணவன் தான் என்று ஆரி கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி வளர்ந்து வருபவர் நடிகர் ஆரி. இவர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான 'ரெட்டைசுழி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்தார்.
இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஆரி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாலை பொழுதின் மயக்கத்திலே, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் பரிசையும் வென்றார் ஆரி. நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.
அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். சமீபத்தில் ஆரி, எல்.வி.பிரசாத் பிலிம் & டிவி அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு நடிப்புக்கான பயிற்சி வகுப்பு எடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆரி, இனிது இனிது படத்தின் போது நடிப்பு பயிற்சியாளனாக எனது பயணத்தை தொடங்கினேன். நான் நடிகனாக மாறியதால் அதில் இருந்து பல ஆண்டுகள் விலகி இருந்தேன்.
இப்போது மீண்டும் சிறப்பு நடிப்பு பயிற்சியாளராக இந்த அகாடமியில் வகுப்பு எடுத்தது எனக்கு மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும். சமீபத்தில் வெளியான சார்பட்டா படத்தில் நடித்த 'டான்சிங் ரோஸ்' என்னுடைய மாணவர் தான். அவரை திரையில் பார்த்த போது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அவரை போல இந்த அகாடமியிலிருந்து செல்லும் மாணவர்கள் யாரேனும், நாளை வெள்ளி திரையில் ஜொலித்தால் அவர்களின் பெற்றோர்களை விட நான் அதிகம் சந்தோசப்படுவேன் என்று கூறியுள்ளார் ஆரி.