ஆதாரமின்றி அவதூறு பரப்ப வேண்டாம், தனது வீடியோ வெளியான நிலையில் பிக் பாஸ் விக்ரமன் போட்ட பதிவு

By krithika · 10/3/2025

தன்னைப் பற்றி எழும் விமர்சனங்களுக்கு பிக் பாஸ் விக்ரமன் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர். முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். அதன்பின், கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதற்குப் பிறகுதான் விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருந்தார். ‌ அதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் விக்ரமன் தனக்கு என ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

பிக் பாஸ் விக்ரமன்:

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது தன்னை காதலித்து பணத்தை ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். பல சர்ச்சைகளுக்குப் பின் அந்தப் பிரச்சனையில் இருந்து விக்ரமன் வெளிவந்தார். பின், சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் சென்னையில் எளிமையாக நடைபெற்றுள்ளது. ப்ரீத்தி கரிகாலன் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது திருமணம் இரு வீட்டார் முறைப்படியும் நடத்தப்பட்டது.

பெண் வேடமிட்டு ஒரு ஆண்:

இந்நிலையில், விக்ரமன் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஐயப்பன் தாங்கல் குடியிருப்பு பகுதியில் கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விக்ரமன் தங்கி இருந்திருக்கிறார். அந்த குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு சுற்றிக் கொண்டிருந்துள்ளார். மேலும், அந்த ஆண் குடியிருப்பு பகுதியில் தனிமையில் உள்ளவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பிடிபட்ட அந்த நபர் விக்ரமன் தான்:

ஒரு நாள் 23 வயது நபரிடம் அந்த பெண் வேடமிட்ட ஆண் பாலியல் தொல்லை கொடுத்தபோது, பலர் சுற்றி வளைத்து பிடித்துள்ளார்கள். அது மட்டும் இல்லாமல், வீடியோவும் எடுத்துள்ளார்கள். அப்போது தான் அந்த நபர் பிக் பாஸ் பிரபலம் விக்ரமன் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு பிறகு குடியிருப்பு வாசிகளே அவரை வெளியே அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்குப்பின் விக்ரமன் அந்த வீடியோவை எடுத்தவர்களை மிரட்டி அழித்ததாகவும், அதற்குப் பெரிய தொகை மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விக்ரமன் விளக்கம்:

தற்போது விக்ரமன் குறித்த இந்த தகவல் வெளியானதால் விக்ரமனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இது தொடர்பாக விக்ரமன் தனது எக்ஸ் பக்கத்தில், இது உண்மைச் சம்பவம் இல்லை என்றும், சினிமா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து, அடிப்படை ஆதாரம் இன்றி, உண்மைத் தன்மையை ஆராயாமல் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது விக்ரமன் குறித்த இந்த செய்தி தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full