அவனுடைய நோக்கமே மிரட்டி பணம் பறிக்கிறதுதான் - பணத்தை ஏமாற்றிய நபர் குறித்து போண்டா மணி.

By Ajju · 8/10/2022

பணம் திருட்டு குறித்து போண்டாமணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதுவரை இவர் 270 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் கன்னட பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் நடிகர் போண்டா மணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். அதோடு இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருக்கிறது. மருத்துவ செலவு செய்ய கூட பணம் இல்லாத நிலையில் போண்டா மணி உதவி கேட்டு பேட்டி அளித்து இருந்தார்.

போண்டா மணிக்கு உதவி செய்த பிரபலங்கள்:

பின் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அவர்கள் போண்டா மணி நலம் குறித்து விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து இருந்தார். இதனை அடுத்து போண்டாமணியின் மருத்துவ செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி, தனுஷ் உட்பட பல பிரபலங்கள் போண்டாமணிக்கு நிதி உதவி செய்திருக்கின்றனர். அதற்கு போண்டாமணியும் நன்றி தெரிவித்து இருந்தார். சில வாரங்களுக்கு முன் தான் போண்டா மணி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார். தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

கைதான திருடன்:

இந்த ஒரு நிலையில் போண்டாமணிக்கு உதவியாளராக இருந்தவர் ராஜேஷ் பிருத்திவ். இவரிடம் போண்டாமணி உடைய மனைவி தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து மருந்து மாத்திரைகள் வாங்கி வருமாறு கூறியிருக்கிறார். ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு ராஜேஷ் பிருத்திவி நகை கடைக்கு சென்று ஒரு லட்சம் ரூபாய்க்கு நகைகளை வாங்கி இருக்கிறார்.பின் அவர் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடியது போண்டா மணிக்கு தெரியவந்தது. இதனை அடுத்து போண்டா மணியின் மனைவி போரூர் போலீசாருக்கு புகார் அளித்திருக்கிறார். பின் போலீசாரும் ராஜேஷ் பிருத்திவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போண்டாமணி அளித்த பேட்டி:

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் போண்டாமணி கூறியிருந்தது, எங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தான். எனக்கும், என் குடும்பத்துக்கும் அவனை யார் என்றே தெரியாது. நான் ஐசிவில் இருந்ததால் அவன் மாஸ்க் போட்டுக்கொண்டு வந்து, நான் இலங்கை தமிழன். உங்களுடைய சொந்தக்காரன். இங்கே இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறேன் என்று சொன்னான். அந்த நேரத்தில் அவன் யார் என்று நான் யோசிக்க வில்லை. பின் அவன் என்னுடைய மனைவி, குழந்தைகளிடம் ரொம்ப நன்றாக பேசி இருந்தான். அவங்களுக்கு தேவையான உதவிகள் எல்லாம் செய்திருக்கிறான். அவங்களும் அவன் பேச்சை நம்பி விட்டார்கள். பின் நான் டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டுக்கும் போய் விட்டேன்.

திருட்டு சம்பவம் குறித்து சொன்னது:

அவன் எங்க கூடவே வந்தான். வரவு செலவு கணக்கு பார்க்கணும். ஆனால், அதை எப்படி பார்க்கிறது என்று என் மனைவி பேசிட்டு இருந்தார். இதையெல்லாம் கேட்டவன் நான் செய்கிறேன் என்று சொல்லி ஏடிஎம் கார்டில் வங்கி கணக்கு விவரங்களை எடுக்கலாம். நான் எடுத்துட்டு வருகிறேன் என்று சொன்னவுடன் என் மனைவியும் அவனிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பினார்கள். கார்டை எடுத்துக் கொண்டு அவன் ரொம்ப நேரம் ஆகியும் காணவில்லை. பின் நாங்கள் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வந்ததால் கிளம்பி விட்டோம். முதலில் எங்களை மிரட்டி தான் அவன் பணத்தை பறிக்க திட்டம் போட்டு இருக்கான்.

நன்றி சொன்ன போண்டாமணி:

கார்டை நாங்களே கையில் கொடுத்தவுடன் பணத்தை எடுத்திருக்கிறான். ஒரு லட்சம் எடுத்த மெசேஜ் மட்டும் என் போனில் வந்தது. பெஞ்சமின் தான் அதை பார்த்துவிட்டு எங்களிடம் சொன்னார். விவரம் தெரிந்த உடனே நாங்கள் கார்ட்டை பிளாக் பண்ணி விட்டோம். என் மனைவியும், மருமகளும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்கள். போலீசும் உடனடியாக ஆக்சன் எடுத்தார்கள். அதற்கு பிறகு இரண்டே நாளில் போலீசும் அவனை மடக்கி பிடித்தது. அவனும் உண்மையை ஒத்துக் கொண்டான். இரண்டு நாள் கழித்து கோர்ட்டில் காசை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காவல்துறைக்கு ரொம்ப நன்றி என்று கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full